தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தங்கும் விடுதி உணவகம் மற்றும் மதுபான கூடங்களில் அமைச்சர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் தங்கும் விடுதி, உணவகம் மற்றும் மதுபானக் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் கூறியது : காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கோயில்கள் மற்றும் பட்டுச்சேலைகள் உற்பத்திக்கு சிறந்த மாவட்டம். இங்கு பல்வேறு ஊர்கள், மாவட்டம் மற்றும் மாநிங்களிலிருந்து அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.  அவர்களுக்கு தங்கும் வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் நோக்கில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை தனியார் துறைக்கு நிகராக மேம்படுத்துவதற்காக ஓட்டல் தமிழ்நாட்டில் உள்ள அறைகள், உணவகங்கள், மதுபான கூடங்களை புனரமைப்பது குறித்தும், திறந்த வெளியில் கூடுதலாக பொழுதுபோக்கு மையங்கள் மற்றும் திறந்தவெளி கூடங்கள், குழந்தைகள் விளையாடும் இடம், புல்வெளிகள், நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக நடைபாதை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உலக சுற்றுலா தினத்தன்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழத்தின் மூலம் இயக்கப்பட்டுவரும் தமிழ்நாடு ஒட்டல்களில் உள்ள அறைகளை ஆன்லைன் இணையதளம் மற்றும் செயலிகளில் தமிழ்நாடு ஓட்டலில் உள்ள அறைகளை பதிவு செய்துகொள்ளலாம். அதேபோல், தங்கும் விடுதிக்கான விலைப்பட்டியலை தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றியமைப்பது குறித்து மேலாளருக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு ஓட்டல் அருகில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள காட்சி பொருட்களை பார்வையிட்டார். அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் பழங்காலத்து நாணயங்கள், பண்டைய காலங்களில் ராஜாக்கள் பயன்படுத்தி வந்த 12ம் நூற்றாண்டை சார்ந்த, மண்ணால் செய்யப்பட்ட தண்ணீர் குவளையை அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும், திறந்த வெளி நிலங்களை புனரமைத்து மக்கள் பயன்படுத்தும் வகையில் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார். முன்னாள் முதல்வர்  கருணாநிதியால் கட்டப்பட்ட இந்த பழமை வாய்ந்த தமிழ்நாடு ஓட்டலில், முதற்கட்டமாக, 4 அறைகளை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார். கூடுதலாக வரவேற்பு வளாகம் மேம்படுத்துதல், வளாகத்தை சுற்றி செடிகள் அமைப்பது,   தென்னிந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், திறந்த உணவகம், சிறிய திறந்தவெளி கூடங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு, கூடிய விரைவில் இவை அனைத்தும் மேம்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஏகாம்பரநாதர் கோயில் வளாக அருகில் அமைக்கப்பட்டுள்ள யாத்ரி நிவாஸை அமைச்சர் பார்வையிட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் சுற்றுலாத்துறை அலுவலர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>