×

தொடர் மழையால் 2வது ஆண்டாக நிரம்பி வழியும் அம்மையார்குப்பம் ஏரி: கிராம மக்கள் கிடா வெட்டி விருந்து

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பத்தில் பெரிய ஏரி 2வது ஆண்டாக நிரம்பி உபரி நீர் வெளியே செல்வதால் எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் மலர் தூவி பூஜைகள் நடத்தினர். பின்னர். கிடா வெட்டி கறி விருந்து படைத்தனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி தொடர் மழை காரணமாக முழுமையாக நிரம்பி உபரிநீர் கலங்கல் வழியாக வெளியே செல்கிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு ஏரி முழு கொள்ளளவு நிரம்பியது. தொடர்ச்சியாக 2வது ஆண்டு ஏரி நிரம்பி உபரி நீர் செல்வதால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் தலைமையில் கிராம மக்கள் ஒன்று திரண்டு ஏரி உபரி நீர் செல்லும் பகுதியில் நேற்று சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தனர். இதில், எஸ்.சந்திரன் எம்எல்ஏ பங்கேற்று ஏரியில் மலர் தூவி பூஜைகள் செய்து கங்காதேவியை வழிபட்டார். மேலும், கிடா வெட்டி கறி விருந்து வைத்து கிராம மக்கள்  சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், பழனி, ஊராட்சி துணை தலைவர் ஜெயந்தி சண்முகம், நாராயணபுரம் ஊராட்சி தலைவர் மோனிஷா சரவணன் உட்பட திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Ammaiyarkuppam Lake , Continuous rain, Ammayarkuppam, lake, people, feast
× RELATED 14ம் தேதி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்