×

அரசு கட்டுமான பணிகளை மதிப்பீடுகளை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை சார்பில், தயாரிக்கப்படும் அரசு கட்டுமான பணிகளுக்கான திட்ட மதிப்பீடுகளை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின், பொதுப்பணித்துறையின் மூலம் பள்ளி கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், வணிகவரி, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கான புதிய கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ரூ.2 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இந்த நிதியை கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் தயார் செய்துள்ள கட்டுமான பொருட்களின் விலையை அடிப்படையாக கொண்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கை சமர்பிப்பதற்கு முன்பாக ஒவ்வொரு கட்டிடத்தின் தரைதளம், மேற்கூரை தளம், சுவர் அமைப்பது, கதவு அமைப்பது உட்பட 300க்கும் மேற்பட்ட இனங்களுக்கு உண்டாகும் செலவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக திட்ட மதிப்பீடுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் தர விவர தகவல்கள் புதுப்பித்து திருத்தி அமைத்திட தகுதியான குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.

அதன்பேரில், தற்போது, பொதுப்பணித்துறை சார்பில் தயாரிக்கப்படும் பல்வேறு அரசு கட்டுமான வேலைகளுக்கு தர விவர தகவல்கள் அடங்கிய மதிப்பீடுகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக அவர் செயல்படுகிறார். நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், நிதித்துறை, ஐஐடி சென்னை, அண்ணா பல்கலை பரிந்துரை குழு உறுப்பினராகவும், நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய பொறியியல் இயக்குனர், சென்னை குடிநீர் வாரிய இயக்குனர், அறநிலையத்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர். இந்த குழுவின் நோடல் துறையாக பொதுப்பணித்துறை செயல்படுகிறது. தற்போது அமைக்கப்படவுள்ள 9 பேர் கொண்ட குழு 2 மாதங்களுக்கு ஒரு முறை  மதிப்பீடு தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கிறது. இந்த குழு சார்பில் திட்டமதிப்பீட்டில் மாற்றங்கள் வேண்டுமா, இல்லையா என்பதை முடிவு செய்கிறது. இக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Government of Tamil Nadu , 9-member committee to inspect government construction work estimates: Government of Tamil Nadu order
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...