கல்வெட்டுல போட்டு பொதுச்செயலாளராக முடியாது: சசிகலாவை கிண்டலடித்த மாஜி அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: கல்வெட்டில் சசிகலா தனது பெயர் போட்டால் மட்டுமே கட்சியின் பொதுச் செயலாளர் ஆக முடியாது. கட்சி அதற்கான சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளும். தியாகத்தலைவி என்று பெயர் மாறி தற்போது புரட்சி தாய் என சசிகலா பெயரை மாற்றி கொண்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்து கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இத்தனை நாளில் ஒரு தடவை கூட எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செலுத்தவில்லை. இதே, பொன்விழா ஆண்டு அடுத்த ஆண்டு நடைபெற்றிருந்தால் அடுத்த ஆண்டுதான் சசிகலா மரியாதை  செலுத்தியிருப்பார்.

சசிகலாவால் தான் 1996ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது.கட்சிகாரர்களை சுரண்டி, சித்ரவதை செய்து தன் குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தியவர் சசிகலா என்பதை அதிமுகவின் கடைக்கோடி தொண்டனும் மறக்க மாட்டான். இன்று திடீரென்று வானத்தில் இருந்து குதித்து புரட்சி தாய் என்ற புதிய அவதாரமாக உருவெடுத்ததுபோல பிம்பத்தை கட்டமைக்கிறார் சசிகலா. அவரின் குடும்பத்தை வாழ வைத்தது தவிர வேற எந்த புரட்சியையும் சசிகலா செய்யவில்லை. கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாதவர் தான் அவர்.

எத்தனை முறை பெயரை மாற்றி வந்தாலும் சரி தமிழ்நாட்டு மக்களும், அதிமுக தொண்டர்களும் இந்த கொள்ளைக் கும்பலை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர். எங்களை இப்போதும் வழிநடத்தி கொண்டு வருகிறார். உள்ளாட்சி தேர்தல் முடிவு குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. பாஜதான் அதிமுகவை வழிநடத்துகிறது என்பது பொய். நாங்கள் ஒன்றும் கைக்குழந்தைகள் இல்லை. எங்கள் கட்சிக்கென வரலாறு, தனித்தன்மை உண்டு.

Related Stories:

More
>