×

அதிமுக 50வது ஆண்டு பொன்விழா எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை

சென்னை: அதிமுக 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதிமுக தொடங்கப்பட்டு 49 ஆண்டுகள் நிறைவடைந்து நேற்றுடன் 50வது ஆண்டு பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறது. பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் திருஉருவச் சிலைகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் மாலை அணிவித்து, கட்சி கொடியினை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து, அவர்கள் பொன்விழா சிறப்பு மலரை வெளியிட, முதல் பிரதியை அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன் பெற்றுக்கொண்டார். அதன் பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கட்சி பணியாற்றும் போது மரணமடைந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் மொத்தம் 15,00,000 ரூபாய்க்கான வரைவோலைகளை குடும்ப நல நிதியுதவியாக வழங்கி, ஆறுதல் கூறினர். தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சார்பில் தயார் செய்யப்பட்ட பொன்விழா பாடல் தொகுப்பின்’’ முதல் பாடல் அடங்கிய குறுந்தகட்டினை வெளியிடப்பட்டனர்.

மேலும், துணைச் செயலாளர் பேராசிரியர் சா. கலைப்புனிதன் எழுதிய ``புரட்சித் தலைவி அம்மா புனித காவியம்’’ என்ற கவிதை நூல் வெளியிடப்பட்டது. வர்த்தக அணி சார்பில், அதன் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ வெங்கட்ராமன் ஏற்பாடு செய்திருந்த அன்னதான நிகழ்ச்சியை ஓ.பிஎஸ், இபிஎஸ் துவக்கி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், தம்பித்துரை எம்பி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : AIADMK 50th Golden Jubilee MGR ,OBS ,EPS ,Jayalalithaa , AIADMK 50th Golden Jubilee MGR, OBS, EPS pay homage to Jayalalithaa statue
× RELATED மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி...