முதல்வர் மற்றும் பெண் மருத்துவர் குறித்து டிவிட்டரில் அவதூறு பதிவு பாஜ பிரமுகர் கல்யாணராமன் நள்ளிரவில் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி நடவடிக்கை

சென்னை: முதல்வர் மற்றும் பெண் மருத்துவர் குறித்து, அவதூறு கருத்துகளை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வந்த பாஜ பிரமுகரான கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாஜ பிரமுகரான கல்யாணராமன், சமூக வலைதளங்களில் ஆபாசமான, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது அவதூறு கருத்துக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்தும், மருத்துவர் ஷர்மிளா என்பவரை பற்றியும் ஆபாசமான கருத்துகளை தனது டிவிட்டர் பக்கத்தில் கல்யாணராமன் (55) பதிவு செய்துள்ளார்.

அதை தொடர்ந்து கல்யாணராமனை உடனே கைது செய்ய வேண்டும் கோரிக்கை எழுந்தது. அதேநேரம் தண்டையார்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாதன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கடந்த 2 மாதத்தில் வெவ்வேறு மதங்களை சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 பதிவுகளை தனது டிவிட்டர் பக்கத்தில் தவறாக பதிவு செய்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து பாஜ பிரமுகர் கல்யாணராமன் மீது மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் ஐபிசி 153(A), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இரவோடு இரவாக நேற்று முன்தினம் சென்னை வளசரவாக்கம் தேவி குப்பம் அன்பு நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து கல்யாணராமனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். முன்னதாக நபிகள் நாயகம் பற்றி தரக்குறைவான வார்த்தைகளை பதிவிட்டதற்காக சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>