×

என்ன செய்வது தோழி?ஃபிரண்டு கிட்ட பேசினா தப்பா?

நன்றி குங்குமம் தோழி

அன்புத்தோழி,
சந்தேக கோடு சந்தோஷக் கேடு என்பார்கள். அந்த சந்தேகம் நல்ல குடும்பத்தை சீரழிப்பதை பார்த்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால் அந்த சந்தேகம், அதுவும் நியாயமில்லாத சந்தேகம் என் வாழ்க்கையில குடும்பத்தை மட்டுமல்ல, நல்ல நட்பையும் சீரழித்து விடும் போலிருக்கிறது.

ஆம். நல்ல நட்பை புரிந்து கொள்ளாதவர்தான் எனக்கு கணவராக வாய்த்திருக்கிறார். இத்தனைக்கும் நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள். எங்கள் வீட்டில் இன்னும் கூட அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. வீட்டுப் பக்கம் கூட சேர்ப்பதில்லை. ஆனால் அவர் நல்லவர் என்று நம்பிதிருமணம் செய்தேன். இப்போது எங்களுக்கு கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

அவர் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தார். எப்போதும் எனக்கு ஆதரவாகத்தான் இருப்பார். அன்பாக பேசுவார். எனது ஆண் நண்பர்கள் குறித்தெல்லாம் அவரிடம் கூறியிருக்கிறேன். ஏன் என் நண்பருக்கு எழுதிய கடிதங்களை என் கணவர் மூலமாக தான் அஞ்சலில் அனுப்புவேன்.

எனது கணவர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் வாங்கி தந்தார். சிம்கார்டும் அவருடையதுதான். செல்போன் வாங்கி தந்த புதிதில் கணவர் அடிக்கடி அழைத்து பேசுவார். நீண்ட நேரம் பேசுவோம். என் அம்மாவிடம், தங்கையிடம் பேசுவேன். அப்படித்தான் ஒருமுறை அம்மாவீட்டுக்கு சென்ற போது எனது வகுப்புத் தோழன் ஒருவன் வந்திருந்தான்..

திருமணத்திற்கு முன்பே பல முறை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். எங்கள் வீட்டில் எல்லோரையும் அவனுக்கு தெரியும். என் அம்மாவுக்கு அவனை மிகவும் பிடிக்கும். நானும் அவனுடன் நீண்ட நேரம் அரட்டை அடிப்போம். சில நேரம் என் தங்கையும் எங்களுடன் சேர்ந்து கொள்வாள்.நானும் படிக்கும் போது அவன் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். அவன் வீட்டிலும் எல்லோரும் என்னிடம் நன்றாக பேசுவார்கள். அவன் வீட்டிலும் தங்கியிருக்கிறேன்.

திருமணத்திற்கு பிறகு அம்மா வீட்டுக்கு அவன் வருவதில்லை. தொடர்பிலும் இல்லை. சுமார் 6, 7 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென எங்கள் வீட்டுக்கு அப்போதுதான் வந்தான். வழக்கம் போல் பேசினான். போகும் போது என் செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டு போனான்.அதன்பிறகு தினமும் போனில் பேசிக் கொள்வோம். பெரும்பாலும் பகலில்தான் பேசுவோம். நான் என் நண்பனிடம் பேசுவது எனது கணவருக்கு தெரியும். ஆனால் நான் மணிக்கணக்கில் பேசுவது தெரியாது.

அவன் அரசு அதிகாரி. அம்மா வீட்டுக்கு அவ்வப்போது வருவான். அம்மா வீட்டில் இருந்து நான்கு தெரு தள்ளியிருப்பதால் நானும் அவன் வரும் ேபாது போய் பார்த்து பேசுவேன்.அரசுப் பணியில் உயர் பதவியில் இருப்பதால் அவன் மீது என் அம்மாவுக்கு ரொம்ப மரியாதை, பெருமை. எனக்கும் அது மகிழ்ச்சிதான். என் கணவர் ‘எப்போ இன்கிரிமென்ட் போடுவாங்க’னு எதிர்பார்க்கிற தனியார் கம்பெனியில்தான் வேலை செய்கிறார்.

ஒருமுறை கணவரது செல்போன் தொலைந்து போய் விட்டது. அதிலிருந்த தொடர்பு எண்கள் இல்லாததால் அவர் மிகவும் சிரமப்பட்டார். அப்போது செல்போன் நிறுவனத்திடமிருந்து அழைப்பு எண் பட்டியலை வாங்கியுள்ளார். அப்போது நான் பயன்படுத்தும் எண்ணின் அழைப்பு பட்டியலையும் வாங்கி உள்ளார். அப்போது அது எனக்கு தெரியாது.

ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு ‘செல்போனில் நெறைய நேரம் பேசாதேமா காது கெட்ரும்’ என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தார். ஆனால் அதை நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒருநாள் என் நண்பனின் ‘பெயரை’ச் சொல்லி அவனிடம் அடிக்கடி பேசுறாயா என்றுகேட்டார். அவன் கூப்பிடும் போது பேசுவேன் என்றேன். உண்மையில் அவன்தான் பெரும்பாலும் என்னை கூப்பிடுவான். அதனால்அப்படி சொன்னேன். பிறகு ‘நீங்கள் இரண்டு பேரும் லவ் பண்ணீங்களா’ என்று கேட்டார்.

அதற்கு நான், ‘இல்லை’ என்றேன். ஆனால் அவரோ விடாமல், உன்னை வர்ணித்து கவிதையெல்லாம் எழுதியிருக்கானாமே? ரெண்டு பேரும் ஒண்ணா ஊர் சுத்துவீங்களாமே’ என்று கேள்வி கேட்டுக் ெகாண்டே இருந்தார்.பொறுக்க முடியாமல், ‘அவன்தான் லவ் பண்றேனு சொன்னான். நான் பண்ணல’ என்றேன். உடனே அவர், ‘ஒருமுறை லவ் பண்ணவன் அதே எண்ணத்தில்தான் உன்கிட்ட பேசுவான். அதனால் அவனிடம் பேசாதே’ என்று கண்டிஷன் போட்டார். நானும் ‘சரி’ என்றேன்.

ஆனால் அவனிடம் பேசுவது எனக்கு தவறாக தெரியவில்லை. அதனால் அவன் அழைக்கும் போது வழக்கம் போல் பேசுவேன். சில நாட்கள் கழித்து அவர், ‘என்ன உன் காதலனிடம் பேசாமல் இருக்க முடியலையா’ என்று கொச்சையாக பேசினார்.
அதனால் கோபமா நான், ‘அவன் என் காதலன் இல்லை. ஃபிரண்டு மட்டும்தான். ஃபிரண்டு கிட்ட பேசினால் தப்பா’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘பிரண்டு கிட்ட மணிக் கணக்கில் தினமும் பேசி கொஞ்சிவீங்களோ’ என்றார்.

‘இல்லை எப்போதாவதுதான் பேசுவேன்’ என்று மறுத்தேன். அவரோ ‘டெய்லி நான் வேலைக்கு போன பிறகு எவ்வளவு நேரம் எப்போது பேசினாய் எல்லாம் தெரியும்’ என்று பட்டியல் போட்டார். . ‘அதுமட்டுமல்ல உங்கள் வீட்டுக்கு அவன் அடிக்கடி வருவதும். அவனிடம் கொஞ்சி பேசுவதும் எனக்கு தெரியும். குழந்தைங்களுக்காக பாக்றேன்.

இல்லனா விவாகரத்து பண்ணிடுவேன்’ என்று அடிக்கடி மிரட்டினார்எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு பெண் தனது ஆண் நண்பரிடம் பேசுவது தவறா? அது காதலாகத்தான் இருக்க வேண்டுமா? வீட்டுக்கு அவன் வரும்போது கூட என் அம்மாவும் வீட்டில் இருப்பார். அவன் ஏதாவது ஜோக் சொல்லும் போது சிரித்தால் கொஞ்சுவதாக அர்த்தமா? என் கணவர் ஏன்இவ்வளவு கேவலமாக சிந்திக்கிறார் புரியவில்லை. இத்தனைக்கும் என்னை விடாமல் துரத்தி காதலித்து கல்யாணம் செய்தவர். என் நண்பனும் காதல் திருமணம் செய்தவன்தான். என் கணவரை விட அவன் நல்லவன். என் அப்பா, அம்மாவை அவருடைய அப்பா, அம்மாவாகபார்ப்பதால் தான், வீட்டுக்கு வருவதாக சொல்கிறான்.

அதை புரிந்து கொள்ளாமல் என் கணவர் எங்கள் நட்பை கொச்சைப்படுத்துகிறார். மனநோயாளி போல் அடிக்கடி எங்கள் நட்பை சொல்லி சண்டை போடுகிறார். வீட்டில் பிள்ளைகள் இருக்கும் வரை அமைதியாக இருக்கிறார். அவர்கள் கல்லூரிக்கோ, வெளியிலோ சென்ற பிறகு, ‘உன் காதலன் எப்படி இருக்கிறான், உங்க வீட்டுக்கு அடிக்கடி வந்து போகிறான் போல. உங்க காதலுக்கு உங்க அம்மா தான் தூதா’ என்று தேய்ந்த ரெக்கார்டு போல திரும்ப திரும்ப சொல்கிறார்.

அதனால் இப்போதெல்லாம் என் ேபானில் நண்பனிடம் பேசுவதில்லை. அம்மா வீட்டுக்கு போனால் அம்மா போனில் பேசுவேன். என் கணவர் தொல்லையில் இருந்து மீள அவனது நட்புதான் ஆறுதலாக இருக்கிறது. இதை புரிந்து கொள்ளாமல் தொல்லை செய்யும் கணவரை எப்படி திருத்துவது? இல்லை காலமெல்லாம் அவரிடம் கஷ்டப்படவேண்டுமா? என்ன செய்வது என்று புரியவில்லை? பிள்ளைகளுக்காக அவரை பொறுத்துக் கொள்ளதான் வேண்டுமா? நான் நல்லவள்தான் என்று நிரூபிக்க என்னதான் செய்வது... எனக்கு வழிகாட்டுங்கள் தோழி.

இப்படிக்கு,

பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,


உங்கள் கணவர் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி தினமும் இப்படி சித்தரவதை செய்வது எவ்வளவு கஷ்டம் என்பதை நான் முழுமையாக புரிந்துகொள்கிறேன். அது எவ்வளவு வேதனையானது என்பதை உணருகிறேன்.ஆண், பெண் நட்பு ஒன்றும் தவறானதுஇல்லை. நீங்கள் இரண்டு பேரும் நட்புடன் பழகுகிறீர்கள். இரண்டு பேரின் நோக்கமும் நட்புதான் என்று புரிகிறது. எனவே வரம்புடன் இருந்தால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.அதே நேரத்தில் உங்கள் திருமணம் காதல் திருமணம். நீங்கள் விரும்பியவரை தான் திருமணம் செய்து இருக்கிறீர்கள். அவர் உங்கள் பிள்ளைகளின் தந்தை.

உங்கள் கடிதத்தில் இருந்து அவர் நல்லவராகத்தான் தெரிகிறார். உங்களிடம் பொறுமையாகத்தான் பிரச்னையை அணுகியிருக்கிறார். அதன்பிறகுதான் பிரச்னையை தொடங்கி இருக்கிறார்.அவருக்கு தெரியாமல் பேசுவதால், அதிக நேரம் ேபசுவதால் என்ன ேபசுகிறார்கள் என்று தெரியாததால் அவராகவே ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். அதனால் உங்களிடம் சண்டை போட்டிருக்கலாம். ஆனால் அதனை சரியென்று சொல்ல முடியாது.

அதே நேரத்தில் பிரச்னை ஆரம்பித்தபோதே நீங்கள் எல்லாவற்றையும் சொல்லி இருக்க வேண்டும். அதற்கு முன்பாகவே கூட சொல்லியிருக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு கடிதங்களை அவர்தான் அனுப்புவார் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதனால் அவருக்கும் ஆண், பெண் நட்பு குறித்த புரிதல் இருந்திருக்கும். உங்கள் விஷயத்தை பொறுத்தவரை உங்கள் நண்பரிடம் மணிக் கணக்கில் பேசுவது, அவர் உங்கள் வீட்டுக்கு வந்துச் செல்வதை எல்லாம் அவராகத்தான் தெரிந்துகொண்டு இருக்கிறார். காரணம் சந்தேகம். அதற்கு நீங்களும் காரணமாக இருந்து இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

நாம் இருக்கும் உறவில், நட்பில் உணர்வுபூர்வமா ஆதரவு, அன்பு கிடைக்கவில்லை என்றால்தான் நாம் இன்னொருவரை தேடுகிறோம். உங்கள் கணவரிடம் ஏதோ குறைபாடு காண்கிறீர்கள், ஏமாற்றத்தை உணருகிறீர்கள். அதனால் உங்கள் நண்பரிடம் பேசுவதின் மூலம் அந்த குறைகளை போக்கி கொள்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது நல்ல நட்பாக இருந்தால் பிரச்னை இல்லை. இல்லாவிட்டால் சிந்திக்க வேண்டும்.

உங்கள் கணவரிடம் ஏதாவது குறைகள் இருந்தால் அதனை பேசி சரிச் செய்ய பாருங்கள். உங்களிடம் அவர் ஏதாவது குறை கண்டால் அதனை தவிர்க்க பாருங்கள். அப்படி விட்டுக் கொடுக்கும் போது உறவு பலப்படும். உங்கள் அன்பு உண்மையானது என்றால் அது சாத்தியப்படும்.நீங்கள் இருவரும் இணக்கமாக வாழ்வது முக்கியம். காரணம் உங்கள் இருவரையும் விட உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம். அதை நீங்கள் இரண்டு பேரும் உணர்ந்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.

உங்கள் நட்பு நேர்மையானது என்பதை உங்கள் கணவருக்கு உணர வையுங்கள். அவருக்கு தெரியாமல் அதை தொடராதீர்கள். தெரியாமல் செய்யும் போதுதான் அவை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆறுதலாக இருக்கும் நட்பை தொலைக்க வேண்டாம். மேலும் நண்பரிடம் பேசியாகவேண்டும் என்ற வெறி உங்களிடம் இல்லை.அதே நேரத்தில் உங்கள் கணவரை விட, நண்பர் உயர்வானவர், நல்லவர் என்ற எண்ணமும் உங்களிடம் இருக்கிறது. அதை தவிருங்கள். உங்கள் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதை கணவரின் குறையாக சொல்லாதீர்கள்.

அவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்று தெரிந்து தான் திருமணம் செய்தீர்கள். அதனால் குறைகளை தேடாதீர்கள். உங்கள் நண்பர் எப்படி என்பது அவர் மனைவியிடம் கேட்டால்தான் தெரியும்.எனவே உங்களுக்கு யார் முக்கியம், எது நல்லது என்று ஆற, அமர யோசியுங்கள். பிள்கைளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் மட்டும் குடும்பம் அல்ல, நாம் மட்டும் சமூகம் அல்ல. மீண்டும் சொல்கிறேன் ‘யோசியுங்கள்’ நல்லதே நடக்கும்.

தொகுப்பு:  ஜெயா பிள்ளை

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!