×

திருவள்ளூர் தாலுகா காவல்நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

திருவள்ளூர்,: தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு இன்று காலை சைக்கிளில் திருவள்ளூரில் உள்ள திருவள்ளூர் வந்தார். பின்னர் அவர், தீயணைப்பு துறை வீரர்களை சந்தித்து பேசினார். திருவள்ளூர் தாலுகா காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.    அப்போது காவல்நிலையத்தில் கோப்புகள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா, முதல் தகவல் அறிக்கை உரியவிதிமுறைகளின்படி பதியப்படுகிறதா என்றும் சோதனை செய்தார். காவல் நிலையத்தில் உள்ள கணினி அறை, ஆய்வாளர் அறை, கைதிகள் அறை மற்றும் ஆவணங்கள், ஆயுதங்கள் பாதுகாப்பு அறை ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

  போலீசாரின் பணிகள் குறித்த விவரங்கள், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கேட்டறிந்தார். வழிப்பறி, செல்போன் பறிப்பு உள்ளிட்ட  குற்றச் சம்பவங்கள் குறித்தும் காவலர்களின் குறைகள் பற்றியும் கேட்டறிந்தார். இதன்பிறகு அங்குள்ள காவலர் குடியிருப்புக்கு சென்று குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கிருந்த குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி அவர்களின் நிலைப்பாடு கேட்டறிந்தார். அப்போது அவர், ‘’நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம்’’ என்று தான் எழுதிய புத்தகத்தை  வழங்கினார். காவலர்களின் குழந்தைகளின் சிலம்பாட்டத்தை பார்த்து மகிழ்ந்து ஊக்கப்பரிசு அளித்தார். இதைத்தொடர்ந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு சைக்கிளில் சென்றார். அப்போது கூடுதல்  போலீஸ் எஸ்பிக்கள் யேசுதாஸ், மீனாட்சி, திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், ஆயுதப்படை டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் நாகலிங்கம், ரவிக்குமார், எஸ்ஐ சக்திவேல் ஆகியோர் இருந்தனர்.

Tags : DGP ,Silenthrababu raids ,Tiruvallur taluka , Tiruvallur taluka, police station, Silenthrababu, inspection
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...