×

சாத்தான்குளம் அரசு பணிமனை டயர் பராமரிப்பு நிலையமாக மாற்றமா?.. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு பணிமனை டயர் பராமரிப்பு நிலையமாக மாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 2017ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 8பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக பஸ்கள் இயக்கப்படுமென வாக்குறுதிகள் அளித்து வருகின்றனர். ஆனால் இன்னும் இயக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டுக்கு முன்பு இப்பணிமனை டயர் பராமரிப்பு நிலையமாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அதிகாரிகள் சார்பில் மறுக்கப்பட்டது.  இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக மீனவளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு நடத்தி கூடுதல் பஸ்கள் இயக்கிட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ  போத்துவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து சாத்தான்குளம் பணிமனையில் கூடுதலாக பேருந்தும், கிராமங்களுக்கு டவுன் பஸ்களும் இயக்கிட வலியுறுத்தினார். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

ஆனால், இதுவரை கூடுதலாக பஸ்கள் இயக்கிட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் சாத்தான்குளம் பணிமனையை டயர் பராமரிப்பு நிலையமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் முதல் பிற பணிமனைகளிலிருந்து டயர்கள் வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இது டயர் பராமரிப்பு நிலையமாக மாற்றிட அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக அறிய முடிகிறது. இதுகுறித்து பணிமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது டெங்கு அச்சம் காரணமாக இங்கே டயர்கள்  சேமித்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

இப்படி படிப்படியாக, டயர் பட்டன் அமைக்கும் நிலையம் அமைக்கப்பட்டு விடும் என  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே பணிமனை நிர்வாகம் டயர் பராமரிப்பு நிலையமாக மாற்றும் முயற்சியை கைவிட்டு வாக்குறுதி அளித்தபடி பஸ்களை உடனடியாக இயக்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறில்லாமல் டயர் பராமரிப்பு நிலையமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டால் போராட்டம் நடத்தப்படும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Satankullam Government , Will Sathankulam Government Workshop be converted into a tire maintenance center? .. Public and social activists protest
× RELATED சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டு சிறை விதிப்பு