சேலம் சரகத்தில் வாகன தணிக்கை 26 ஆம்னி பஸ்களுக்கு ரூ70 ஆயிரம் அபராதம்: வரி செலுத்தாத பஸ் பறிமுதல்

சேலம்: ஆயுதபூஜை விடுமுறையை யொட்டி, ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள சுங்கசாவடிகளில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள போக்குவரத்து அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். சேலம் சரகத்தில் மேட்டுப்பட்டி, தொப்பூர் சுங்கச்சாவடிகளில், கடந்த 13ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ச்சியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தொடர் சோதனையில் வாகனங்கள் கண் கூசும் முகப்பு விளக்குகளை பயன்படுத்தியது, அவசர வழி கதவு செயல்படாதது, காற்று ஒலிப்பான் பயன்படுத்தியது, சாலை வரி செலுத்தாமல் இயக்கியது, முறையான ஆவணங்கள் இல்லாதது உள்ளிட்ட விதிமுறையை மீறியது தெரியவந்தது. இவ்வாறு  இயக்கிய 26 ஆம்னி பஸ்களுக்கும், விதிமுறை மீறி இயக்கிய 42 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆயுதபூஜையையொட்டி நடந்த சிறப்பு வாகன தணிக்கையில் விதிமுறையை மீறி இயக்கிய 26ஆம்னி பஸ்களுக்கு ரூ70 ஆயிரம் அபராதம், வரியாக ரூ25 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. 42 வாகனங்களுக்கு ரூ42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வரி செலுத்தாமல் இயக்கிய ஒரு ஆம்னி பஸ், மேக்ஸ் கேப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது,’’ என்றனர்.

Related Stories:

More
>