பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: பைனலில் பாசிலாஷ்விலி-கேமரோன் நாரி மோதல்

இண்டியன்வெல்ஸ்: பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பைனலில் நிகோலஸ் பாசிலாஷ்விலியும், கேமரோன் நாரியும் மோதவுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது செமி பைனலில் ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை எதிர்த்து அமெரிக்காவின் இளம் வீரர் டெய்லர் பிரிட்ஸ் மோதினார். இப்போட்டியில் டைபிரேக்கர் வரை நீடித்த முதல் செட்டை கடும் போராட்டத்திற்கு பின்னர் பாசிலாஷ்விலி கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டில் பாசிலாஷ்விலியிடம் டெய்லர் பிரிட்ஸ், சரணடைந்து விட்டார். இதனால் இப்போட்டியில் 7-6, 6-3 என்ற கணக்கில் பாசிலாஷ்விலி வென்று, பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு செமி பைனலில் இங்கிலாந்தின் கேமரோன் நாரியுடன், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மோதினார். இப்போட்டியில் கேமரோன் நாரி 6-2, 6-4 என எளிதாக நேர் செட்களில் வென்று, நடப்பு பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் பைனலுக்கு முன்னேறியுள்ளார். பிஎன்பி பாரிபாஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பைனல், இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. பாசிலாஷ்விலியும், கேமரோன் நாரியும் இதற்கு முன்னர் நெதர்லாந்தில் நடந்த ராட்டர்டாம் ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் மோதினர். அதில் கேமரோன் நாரி, 6-0, 6-3 என நேர் செட்களில் பாசிலாஷ்விலியை வீழ்த்தியுள்ளார்.

Related Stories: