திருப்புத்தூர் பகுதி பெருமாள் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவித்திருந்தது. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா தளர்வுகளில் வழக்கம் போல் கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவித்திருந்தார். இதனையடுத்து புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையான நேற்று, திருப்புத்தூர் அருகே உள்ள கொங்கரத்தியில் உள்ள வண்புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில் மூலவரையும், உற்சவரையும் பக்தர்கள் துளசி மாலை அணிவித்தும், அர்ச்சனை செய்தும், நெய் தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

திருப்புத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று துளசிமாலை அணிவித்து பெருமாளை வழிபட்டனர். உற்சவ பெருமாள் தேவியார் மற்றும் பூதேவியாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போன்று, திருப்புத்தூரில் உள்ள நின்ற நாராயணப்பெருமாள் கோயிலிலும் நேற்று ஏராளமான பக்தர்கள் துளசிமாலை அணிவித்து பெருமாளை வழிபட்டனர்.

Related Stories:

More