குமரி மாவட்டம் முழுவதும் கனமழை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து: 28 ஆயிரம் கன அடி வெளியேற்றம்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும்  கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 28 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.  அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்று குமரி மாவட்டம் முழுவதும் கன மழை கொட்டித்தீர்த்தது.  நாகர்கோவில் பகுதியில் நேற்று பகல் பொழுது முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தது.நேற்று காலை வரை அதிகபட்சமாக 63 மி.மீ மழை பெய்திருந்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  நகரப்பகுதியை விட மலைப்பகுதியில் கனமழை  பெய்தது. இதனால்  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் பெருமளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.மலையோர பகுதிகளில் கனமழையை தொடர்ந்து  குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை  பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். அணைகளில் இருந்து வெளியேற்றப்படும்  தண்ணீர், அணைகளுக்கு நீர்வரத்து போன்றவை தொடர்பாகவும், அணைகளின் நீர்மட்டம்  தொடர்பாகவும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் வசந்தி  மற்றும் அலுவலர்களுடன் அங்கு ஆலோசனை நடத்தினார்.

பின்னர் கலெக்டர் அரவிந்த் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது: குமரி  மாவட்டத்தில் நகர பகுதிகளைவிட  அணைகளின் நீர்பிடிப்பு  பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. அதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,  சிற்றார்-1, சிற்றார்-2 ஆகிய நான்கு அணைகளிலும் நீர்வரத்து அதிகமாக  இருந்தது. இதனால் காலையில் 44 அடியில் இருந்த பேச்சிப்பாறை அணை மதியம் 46.8  அடி என்ற அளவில் நீர்மட்டம் உயர்ந்தது.  மதிய வேளையில் 4 அணைகளுக்கும்  சேர்த்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. இப்போது  பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி  தண்ணீர் வௌியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளிலும்  சேர்த்து 3500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மொத்தமாக 28  ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து  அணைகளின் நீர்மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைக்கு  கீழ் பகுதிகளில் பெரிய அளவில் மழை இல்லை, இருப்பினும்  அணைகளுக்கு நீர்வரத்து இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு  வெளியிடப்பட்டிருந்தது. தாழ்வான மூன்று நான்கு இடங்களில் உள்ள மக்களை  வெளியேற்றி அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளோம். மூன்று  இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நீர்மட்டம்  கண்காணிக்கப்படுகிறது. மண்டல அலுவலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி  அலுவலர்கள் களத்தில் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். குளங்களில்  நீர்கசிவு உட்பட எங்கெல்லாம் பிரச்னைகள் உள்ளதோ அதெல்லாம்  கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நேற்று மதியம் சுமார் ஒரு மணி நேரத்தில் பேச்சிப்பாறை அணை பகுதியில் மட்டும் 5 மி.மீ மழை பெய்திருந்தது. குமரி மாவட்டத்தில் மழை காரணமாக ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுந்து வருகிறது. நாகர்கோவில் செட்டிக்குளம் எம்ஜிஆர் நகரில் மோகினி(62) என்பவரது வீடு மழையால் இடிந்து விழுந்தது. இதனை போன்று ராஜாக்கமங்கலம் ஒன்றியம் எள்ளுவிளை ஊராட்சி கீழ சட்டுவன்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரி என்பவரின் ஓட்டுவீடு இன்று பெய்த மழையால் இடிந்து விழுந்துள்ளது. நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்ற மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. விடுமுறை தினம் என்பதால் வேறு பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

பாலங்களில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டாம் கலெக்டர் மேலும் கூறியது:

தீயணைப்பு துறையினரும் தயார்நிலையில் பிரச்னைகள் வருகின்ற இடங்களை பார்த்து மீட்பு பணி செய்து வருகின்றனர்.  மக்கள் யாரும் தண்ணீர் அதிகம் பாய்கின்ற ஆற்று பாலங்களில் நின்று வேடிக்கை  பார்க்க செல்ல வேண்டாம். தண்ணீர் அதிகம் பாய்வதால் இரண்டு, மூன்று  நாட்களுக்கு குளிப்பதற்காக ஆற்று பகுதியில் செல்ல வேண்டாம். நீர்நிலைகளில்  குளிக்க தடை விதிக்கப்படுகிறது. பெரிய அளவில் இடி மின்னல் இல்லை என்றபோதும் மழைக்காலங்களில் மக்கள் வெளியே சுற்றுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுவர்களிடம் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற  அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>