முதல்வருடன் திருமாவளவன் சந்திப்பு: எஸ்.சி., எஸ்டி ஆணையம் அமைத்ததற்கு நன்றி தெரிவித்தார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன்,  மாநில எஸ்.சி.எஸ்.டி ஆணையம் அமைத்து தலைவர், துணை தலைவர் ஆகிய உறுப்பினர்களை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி நேற்று சந்தித்தார். பின்னர் திருமாவளன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநில எஸ்.சி.எஸ்.டி ஆணையம் அமைத்து அதற்கென தனி சட்டத்தையும் உருவாக்கி தலைவர், துணை தலைவர் ஆகிய உறுப்பினர்களையும் அறிவித்த முதல்வருக்கு விசிக சார்பில் நன்றியை தெரிவித்தோம்.

மாநில அளவில் ஒன்றிய அரசின் நிதி எந்த அளவிற்கு செயல்பாட்டில் உள்ளது. திட்டங்கள் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க முதல்வரின் தலைமையில் குழு செயல்படும். அதில் 13 எம்பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவுடன் பல ஆண்டுகள் நெருக்கமாக இருந்தவர் சசிகலா. அவர் நினைவிடம் செல்வது, அரசியலில் ஈடுபடுவது என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை.

இதை விசிக விமர்சிக்க விரும்பவில்லை. சசிகலாவின் இந்த நடவடிக்கைகளை வரவேற்கிறோம். அதிமுகவை மீட்க முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறி. பாஜவுடன் கூட்டணி வைத்த பிறகு அதிமுக பின்னடைவை சந்தித்து வருகிறது என்பது தான் உண்மை. சசிகலா அதிமுகவை கைப்பற்றி காப்பாற்றுவது எந்த அளவிற்கு உண்மை என்று பொருத்திருந்து பார்ப்போம். இவ்வாறு கூறினார்.

Related Stories:

More
>