சேலத்தில் பியூட்டி பார்லர் இளம்பெண் கொலை சூட்கேசில் சடலத்தை சுருட்டிய கொடூரம்: வேலை செய்த 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு வலை

சேலம்: சேலத்தில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த இளம்பெண்ணை கொலை செய்து, சடலத்தை சூட்கேசில் சுருட்டி வைத்துள்ளனர். இதுதொடர்பாக தலைமறைவான மசாஜ் சென்டர் ஊழியர்களான 2 பெண் உள்ளிட்ட 3 பேரை, போலீசார் தேடி வருகின்றனர். மேலும், அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல் (26), மாற்றுத்திறனாளி. இவர், அழகு கலை நிபுணர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சேலத்திற்கு வந்த தேஜ்மண்டல், அழகாபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளார். பின்னர், பள்ளப்பட்டி, சங்கர்நகர் பகுதியில் 2 பியூட்டி பார்லர், மசாஜ் சென்டரை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் நடேசன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில், தேஜ்மண்டல் வாடகைக்கு 2 வீடுகளை எடுத்து தங்கியிருந்தார். ஒரு வீட்டில் அவரும், மற்றொரு வீட்டில் அவரது மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்த 2 பெண், ஒரு ஆண் ஆகியோரும் தங்கியிருந்தனர். தேஜ்மண்டலின் வீட்டிற்கு, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பிரதாப் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். தன்னை அவரின் கணவர் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பிரதாப், வீட்டு உரிமையாளரான அதிமுக பிரமுகர் நடேசனுக்கு போன் செய்து, தனது மனைவி போனை எடுக்கவில்லை.

அதனால், வீட்டில் சென்று பாருங்கள் எனக்கூறியுள்ளார். உடனே அவர் அங்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனால், வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால், சந்தேகமடைந்த நடேசன், அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக போலீசார் வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பெட்ரூமின் சிலாப்பில் இருந்த ஒரு பெரிய சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டறிந்தனர். உடனே சூட்கேஸை இறக்கி திறந்து பார்த்தனர். உள்ளே தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு, அரை நிர்வாண நிலையில் சடலமாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தார். உடல் அழுகி காணப்பட்டது. பின்னர், பக்கத்திலேயே தேஜ்மண்டல் வாடகைக்கு எடுத்திருந்த மற்றொரு வீட்டை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர். அங்கு தங்கியிருந்த 2 பெண்கள்  உள்ளிட்ட 3 பேரையும் காணவில்லை. வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது.

இதையடுத்து, தேஜ்மண்டல் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர். இக்கொலையில் குற்றவாளிகளை பிடிக்க, 5  தனிப்படை அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக, பிரதாப் பற்றி விசாரித்த போது, அவர் சென்னையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறியுள்ளார். ஆனால், அவர் கொலையுண்ட தேஜ்மண்டலுடன் இணைந்து, சேலத்தில் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் மூலம்  பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அவர் தேஜ்மண்டலின் கணவர் இல்லை, ரகசிய காதலன் என்றும் தெரிந்தது. உடனே இரவோடு இரவாக அவரை சென்னையில் இருந்து சேலத்திற்கு வரவழைத்த தனிப்படை போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில், ‘‘சில மாதங்களுக்கு முன்தான் தேஜ்மண்டல் எனக்கு பழக்கம். இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். கடந்த ஒரு மாதத்திற்கு முன், வேலைக்காக சென்னை சென்று விட்டேன். தினமும் போனில் பேசுவோம். கடந்த 5 நாட்களாக அவர் என்னிடம் பேசவில்லை. அதனால், சந்தேகமடைந்து வீட்டு உரிமையாளரை பார்க்க சொன்னேன்,’’ என்று அவர் கூறியுள்ளார். பிரதாப் மீது பள்ளப்பட்டி போலீசில்  பாலியல் வழக்கு உள்ளது. அந்த வழக்கில் கைதாகாமல் தலைமறைவாக சென்னையில் இருந்துள்ளார். பாலியல் தொழில் கும்பலின் தலைவனாகவும் இவர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து தேஜ்மண்டல், தனது வீட்டருகே குடி வைத்திருந்த 2 இளம்பெண்கள்  உள்ளிட்ட 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அவர்கள் 3 பேரும், கடந்த 5 நாட்களாக சேலத்தில் இல்லை. வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகியுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், கடைசியாக தேஜ்மண்டலின் வீட்டிற்கு அந்த 3 பேரில் ஒரு பெண், ஒரு ஆண் சென்று வந்தது பதிவாகியுள்ளது. அவர்கள், வீட்டை பூட்டி விட்டு சென்றபின், யாரும் அங்கு செல்லவில்லை. எனவே, அவர்கள் தான் இக்கொலையை செய்திருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.

தலைமறைவான 3 பேரும் சொந்த ஊரான பெங்களூருவுக்கு சென்றிருக்கலாம் எனக்கருதி, அங்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். அவர்கள் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொலை, ஊழியர்களுக்கிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு அல்லது சமீபத்தில் பாலியல் வழக்கில் அவர்களோடு பணியாற்றிய பெண்கள் சிக்கிய விவகாரத்தில் நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வங்காளதேசத்துக்கு ஓட்டம்

அழகி தேஜ்மண்டல் கொலை வழக்கில், கொலையாளி வங்காளதேசம் தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளப்பட்டி பகுதியில் ஸ்பா மையம் நடத்தி வந்தபோது, அங்கு வேலை பார்த்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண்ணை, தேஜ்மண்டல் சிக்க வைத்து விட்டதாக, அப்பெண்ணின் கணவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் பழிக்கு பழி வாங்க அவர் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. அவர் வங்காளதேசத்தை சேர்ந்தவர். அவரது செல்போன் டவரை வைத்து தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றனர். ஆனால் அங்கிருந்து அவர் வங்காளதேசம் தப்பி சென்று விட்டார். இதனால் தனிப்படை போலீசார் ஏமாற்றத்துடன் சேலம் திரும்பினர். அவரை பிடித்தால் உண்மையான கொலையாளி யார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தொழில் போட்டியில் கொலையா?

பியூட்டி பார்லர் பெண் தேஜ்மண்டல், அவரது காதலன் பிரதாப்புடன் இணைந்து, பல ஆண்டுகளாக சேலத்தில் ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். இவர்கள் நடத்திய ஸ்பா சென்டரில், போலீசார் 2 முறை சோதனை நடத்தியும், தேஜ்மண்டல் மீது வழக்கு பதியவில்லை. ஒரு இடத்தில் மட்டும், காதலன் பிரதாப் மீது வழக்கு பதிவு செய்தும், அவரை கைது செய்யவில்லை. இவர்கள் நடத்தி வந்த ஸ்பா சென்டரில் பணம் கொட்டியது. இந்த மையத்தில் வேலை பார்த்த இளம்பெண், தனியாக ஸ்பா சென்டரை துவங்கியதாக கூறப்படுகிறது. இதனால் தேஜ்மண்டல், அப்பெண்ணை ரவுடிகளை கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அப்பெண் இறந்தார். அந்த பெண்ணின் ஆதரவாளர்கள்  தேஜ்மண்டலை தீர்த்து கட்டினார்களா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

Related Stories:

More
>