×

கடுமையாக உழைக்க வேண்டும் பாமக பொதுக்குழுவில் முடிவு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தோற்ற நிலையில், தமிழ்நாட்டில்  ஆட்சியமைக்கும் அளவுக்கு தனிப்பெரும் கட்சியாக வளர்த்தெடுப்பதற்காக  கடுமையாக உழைக்க உறுதியேற்கிறோம் என்று பாமக சிறப்பு பொதுக்குழு  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைமை  அறிவித்துள்ளது.  இதுகுறித்து பாமக தலைமை வெளியிட்ட அறிக்கை:   பாமகவின்  சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நேற்று இணையவழியில் நடைபெற்றது. அதில் பாமக  வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டுமானால்  தமிழ்நாட்டை  ஆட்சி செய்யும் நிலைக்கு  முன்னேற வேண்டும்.

அதற்கான செயல் திட்டங்களை  வகுத்து கடுமையாக உழைத்தால் மட்டும் தான் ஆட்சிக் கனவு நனவாகும். வலிமையான  கட்சிகள் தான் வலிமையான ஜனநாயகத்திற்கு அடித்தளம் அமைக்கும். அந்த வகையில்  ஜனநாயகம் தழைப்பதற்கும் பாமக மிகவும் வலிமையானதாக மாறுவது அவசியமாகும்.  இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாமக வலிமைப்படுத்துவது தான் முதன்மையான பணி என்று இந்தப் பொதுக்குழு கருதுகிறது.  அதற்காக பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் கடுமையாக உழைப்பதற்காகவும்  இப்பொதுக்குழு உறுதியேற்கிறது. இதற்காக பல்வேறு செயல்திட்டங்களை பாமக  நிறுவனர் ராமதாஸ் உருவாக்கி வைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில்  ஆட்சியமைக்கும் அளவுக்கு வலுப்படுத்துவதற்கான அனைத்து திட்டங்களை  செயல்படுத்துவதற்காக நிறுவனர்  ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி  காட்டும் வழியில் கடுமையாக உழைக்க பாமக சிறப்பு பொதுக்குழு உறுதியேற்றுக்  கொள்கிறது. தமிழ்நாட்டில் பாமகவை வலுப்படுத்தும் நோக்கத்துடன், கட்சியின் நிர்வாக அமைப்பில்  பல்வேறு மாற்றங்களைச் செய்ய பொதுக்குழு தீர்மானித்திருக்கிறது.  அதனடிப்படையில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகிய  பதவிக்கான அதிகாரங்களில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதன்படி, பாமக  விதி எண் 10ல் திருத்தம் செய்யப்பட்டு, மாவட்ட அளவில் மாநில துணைப்  பொதுச்செயலாளர் பதவி கைவிடப்படுகிறது. இனி கட்சி ரீதியிலான மாவட்ட அமைப்பு  மாவட்ட செயலாளரின் நிர்வாகத்தின் கீழ்  இயங்கும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pama General Committee , To work, pamaka, public
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...