பதவிகளுக்கான தகுதி குறித்து முடிவு செய்த பிறகு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில், தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் சேட் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தனது மனுவில், தமிழகத்தில் பல மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் கடந்த ஓராண்டாக தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  இப்பணியிடங்களை நிரப்பும் வரை, தற்போதைய தலைவர்கள், உறுப்பினர்கள், காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பணிகளை மேற்கொள்ளும்படி சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப்  பானர்ஜி அடங்கிய அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் நுகர்வோர் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நுகர்வோர் குறை தீர் ஆணையத்திற்கான தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்புக்கு காத்திருக்கிறோம். நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய என்று  அரசுக்கு உத்தரவிட்டு  விசாரணையை தள்ளிவைத்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 21ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நுகர்வோர் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியமனம், அவர்களின் பணிக்காலம், ராஜினாமா, பதவி நீக்கம், உறுப்பினர்களின் தகுதி ஆகியவை தொடர்பாக மாநில அரசுகளின் கருத்துகளை ஒன்றிய அரசு கேட்டுள்ளது. தமிழக அரசு தனது கருத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளது. உரிய உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுகர்வோர் குறைதீர் ஆணைய நியமனம் தொடர்பாக இந்த நீதிமன்றம் நியமித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். அடுத்ததாக நியமனம் செய்யவிருந்த நீதிபதியும் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். நியமனங்களுக்கான தகுதி முடிவு செய்யப்பட்டவுடன் நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கான நியமனங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்து விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்குடன் ஏற்கனவே, இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கையும் சேர்த்து பட்டியலிடுமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories:

More
>