புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை: ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

சென்னை:புரட்டாசி மாதம் என்றாலே, பெருமாள் கோயில்களில் திருவிழாக்கோலம் தான். அதிலும், புரட்டாசி  சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு, கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம். இதனால், புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால், 3 வாரமாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் வெளியே நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், கோயில்களை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையேற்று, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த 14ம் தேதி அறிவித்தது. இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல் கோயில்கள் திறக்கப்பட்டன. விஜயதசமி பண்டிகை என்பதால் கோயில்களில் பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் ேகாயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்ற நிலையில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

குறிப்பாக, சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயில், மயிலாப்பூர் மாதவரப்பெருமாள் கோயில், ஆதிகேசவ பெருமாள் கோயில், சவுகார்பேட்டை பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயில், வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயில் உட்பட தமிழகம் முழுவதும் பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி காலையிலேயே நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதனை தொடர்ந்து மந்திரங்கள் முழங்க பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதை காண வழக்கம்போல் பக்தர்கள் அதிகாலையிலேயே வந்ததால் கூட்டம் அலைமோதியது. இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் எழுப்பி வழிபட்டனர். 

Related Stories:

More