பெரம்பூரில் நள்ளிரவு பரபரப்பு தலையில் கல்லை போட்டு முதியவர் கொடூர கொலை: மனநலம் பாதித்தவர் கைது

பெரம்பூர்: பெரம்பூர் கண்ணபிரான் கோயில் தெரு, மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொதுகழிப்பறை உள்ளது. இதனை, மூர்த்தி (65) என்பவர் பராமரித்து, அருகில் உள்ள நடைபாதையில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் செம்பியம் போலீசார், இந்த பகுதியில் ரோந்து சென்றபோது, தலையில் பலத்த காயத்துடன் மூர்த்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.  இதையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்தபோது, மூர்த்தி இறந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, அதே பகுதியில் ரத்த கறையுடன் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். அதில், ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்த ஹேமன் (24) என்பதும், இவர் தான் மூர்த்தியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

இவர், கடந்த ஒரு ஆண்டாக போரூரில் உள்ள மனநல காப்பகத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன் காப்பாகத்தில் இருந்து தப்பி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இவர், எதற்காக மூர்த்தியை கொலை செய்தார் என போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More