சீட் பெல்ட் போடாமல் காரில் பயணம் அயோத்தி தசரதனின் மகன் ராமனுக்கு ரூ.500 அபராதம்: சமூக வலைதளத்தில் நாறும் கேரள போலீஸ்

திருவனந்தபுரம்: வாகன சோதனையின் போது போலீசிடம் சிக்காமல் இருப்பதற்காக சிலர் போலி முகவரி, பெயரை கொடுத்து தப்பிப்பது உண்டு. அப்போது, போலீசுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக கொஞ்சமாவது நம்பும் வகையில் தான் இது போன்ற ஆட்கள் முகவரியை கொடுப்பார்கள். ஆனால், கேரளாவில் ஒரு வாலிபர் நம்பவே முடியாத வகையில் பெயரையும், முகவரியையும் கொடுத்து போலீசை ஏமாற்றி இருக்கிறார். கேரள மாநிலம், கொல்லம் அருகே உள்ள சடையமங்கலத்தில் சப் -இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் 2 நாட்களுக்கு முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சீட் பெல்ட் அணியாமல் வாலிபர் ஒருவர் காரை ஓட்டி வந்தார். அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்த சப்-இன்ஸ்பெக்டர், பெயர்,  முகவரியை கேட்டார். அதற்கு அந்த வாலிபர் கூலாக, ‘ராமன்’ என்று கூறினார். அதை சப்-இன்ஸ்பெக்டர் எழுதி கொண்டார். ‘அப்பா பெயர் என்ன?’ என்று கேட்டதற்கு, ‘தசரதன்’ என்று வாலிபர் பதிலளித்தார். அதையும் எழுதி கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், ‘எந்த ஊர்?’ என கேட்டார். அதற்கும் சற்றும் தயங்காமல், ‘அயோத்தி’ என்று வாலிபர் கூற, அதையும் சப்- இன்ஸ்பெக்டர் எழுதி கொண்டு, அபராத சீட்டை அவரிடம் நீட்டினார்.

ஆனால், இதை அனைத்தையும் அந்த வாலிபருடன் வந்திருந்த இன்னொருவர் ரகசியமாக  செல்போனில் வீடியோ எடுத்ததை சப்-இன்ஸ்பெக்டர் கவனிக்கவில்லை. அந்த வீடியோவை, ‘போலீசை ஏமாற்றிய தசரதன் மகன் ராமன்’ சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் மக்கள், கேரள போலீசின் அப்பாவி தனத்தை கிண்டலடித்து வருகின்றனர்.

Related Stories: