கோயில்களுக்கு மதிப்பீடு செய்யும் பணி பொறியாளர்களுக்கு கட்டணம் நிர்ணயம்: ஆணையர் குமரகுருபரன் அறிவிப்பு

சென்னை: கோயில் திருப்பணிகளுக்கு மதிப்பீடுகளை தயார் செய்து வழங்க, பொறியாளர்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு  திருப்பணிகள் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், முதல்வர், அமைச்சர் அவ்வபோது அறநிலையத்துறை சார்ந்த கோயில்களில் திருப்பணிகள் அறிவிப்புகள் செய்வதாலும், மேற்படி திருப்பணிகளுக்கான மதிப்பீடுகளை உடனுக்குடன் தயார் செய்து பணிகள் முடிக்க வேண்டியுள்ளது.

இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கோயில்கள் புனரமைப்பு மற்றும் பாதுகாத்தல் பணித்தொகுதியில் தற்சமயம் போதிய பொறியாளர்கள் மற்றும் பொறியியல் சார் அலுவலர்கள் முழுமையாக இல்லாத காரணத்தினால், திருப்பணியில் தொய்வு ஏற்படாமலிருக்க இனி வரும் காலங்களில் அனைத்து சார்நிலை அலுவலர்களும் கோயில் திருப்பணிகள் தொடர்பான மதிப்பீடுகளை பொதுப்பணித்துறையினரால் அங்கீகாிக்கப்பட்டு, மாவட்ட கலெக்டரால் நியமனம் பெற்ற பட்டய பொறியாளர்கள் மூலம் துறை விதிகளுக்குட்பட்டு உடனுக்குடன் தயாரித்து அனுப்பிட வேண்டும்.

மதிப்பீட்டினை தயாரித்து அளிக்கும் பட்டயப்பொறியாளர்கள், மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்பட்ட பட்டயப்பொறியாளர்களின் பட்டியலில் உள்ளதற்கான சான்றினை மதிப்பீட்டு உடன் இணைக்க வேண்டும். இதற்காக பட்டயபொறியாளர்களுக்கு வழங்க வேண்டிய மதிப்பூதிய கட்டணத்தினை நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்படுகிறது. அதன்படி ரூ.10 லட்சம் வரை மதிப்பீடு தயார் செய்ய ரூ.3 ஆயிரம், ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை மதிப்பீடு தயார் செய்ய ரூ.7500, ரூ.25 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மதிப்பீட்டில் 0.30 சதவீதமும், ரூ.1 கோடிக்கு மேலாக மதிப்பீடு தயார் செய்ய மதிப்பீட்டின் தொகையில் 0.25 சதவீதம் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

Related Stories:

More
>