×

2,650 ஆஷா பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்: அமைச்சர் உறுதி

சென்னை:  பணி நிரந்தரம், மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கத்தின் கோரிக்கை மாநாடு சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் வகிதா நிஜாம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு ஏஐடியூசி தலைவருமான கே.சுப்பராயன், தமிழ்நாடு ஏஐடியூசி பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் வழங்கினர்.  இதை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற முடிந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஆஷா பணியாளர்களிடம்  தெரிவித்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் பணியாற்றும் 2,650 ஆஷா பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காசநோய், கர்ப்பிணிகளை கண்டறிந்து பதிவு செய்பவர்களுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 42 வயதுக்குட்பட்ட பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டு பயிற்சி கொடுத்து ஆண்டுக்கு 60 பேரை நிரந்தர செவிலியராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Tags : Asha ,Minister , Employees, Identity Card, Minister
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...