×

2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வங்க, அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (17ம் தேதி) கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

18ம் தேதி(நாளை) வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 19ம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20ம் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக தர்மபுரியில் 7 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. வேலூர் மாவட்டம் பொன்னை அணைக்கட்டு, நாகர்கோவில் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டி, சோழவரத்தில் தலா 6 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஓடிசா கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா லட்சத்தீவு கடலோர பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் நிலைகொண்டுள்ளது. இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags : Bengal ,Arabic Sea ,Tamil Nadu ,Meteorological Center , Depression, Tamil Nadu, heavy rains, fishermen, weather Research Center
× RELATED மே.வங்கத்துக்கு எதிராக பாஜ அவதூறு...