தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன்: ராகுல்காந்தி பேச்சு..!!

டெல்லி: தேசிய காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்ட  ராகுல் காந்தி, 2019 மே 25ம் தேதி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து  விலகினார். ராகுல் காந்தி தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று  காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து  நிர்பந்தம் செய்தனர்.

அவர் மறுத்து வந்ததால் சோனியா காந்தியே மீண்டும்  இடைக்காலத் தலைவரானார். இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில், காங்கிரஸ்  கட்சிக்கு முழுநேர தலைவர் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. நேரு  குடும்பத்துக்கு வெளியேயிருந்து ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று  ராகுல் காந்தி பலமுறை தெரிவித்துவிட்டார். ஆனால், புதிய தலைவரை தேர்வு  செய்வதில் இழுபறி நீடித்தது.

காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு, உள்கட்சி விவகாரங்கள், 5 மாநில தேர்தல் குறித்து சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூடி ஆலோசனை நடத்தியது. இதுகுறித்து மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘ராகுல்காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் பிரியங்கா காந்தியின் போராட்டம் அனைவரது கவனத்தை ஈர்த்தது. அதனால், பிரியங்கா காந்தியை தலைவராக தேர்வு செய்ய சில தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். வரும் 5 மாநில தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், உட்கட்சி அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. புதிய தலைவர் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்’ என்றனர்.

இந்த நிலையில் ராகுல்காந்தி கூறியதாவது: மீண்டும் காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியது பற்றி பரிசீலிப்பேன். கட்சி தலைவர் மட்டத்தில் கொள்கையில் தெளிவு வேண்டும் தேர்தல் வரும் வரை காங்கிரஸ் கட்சி தலைவராக இருக்க வேண்டும் சில தலைவர்கள் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: