குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிய 5 வடமாநில சிறுவர்கள் மீட்பு: திருவொற்றியூரில் அதிரடி

திருவொற்றியூர்: சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் வடமாநிலங்களை சேர்ந்த சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதையடுத்து சென்னை வால்டாக்ஸ் சாலையில் பால் கடம்பு வியாபாரத்தில் ஈடுபட்ட சிறுவனை, சைல்டு லைன் ஊழியர்கள் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவன் திருவொற்றியூர், கோமாதா நகரில் தங்கியிருப்பதாகவும் தன்னை போன்று மேலும் பல வடமாநில சிறுவர்கள் பால் கடம்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளான். இதுகுறித்து சென்னை வடக்கு குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன்தாஸ், உறுப்பினர் காருண்யாதேவி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தைகள் நலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 13-ம் தேதி திருவொற்றியூர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் உமாதேவி தலைமையில் உதவி ஆய்வாளர் உஷாராணி மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து சென்றனர்.சென்னை திருவொற்றியூர், மாட்டு மந்தை அருகே உள்ள கோமாதா நகர் பகுதியில், பீகார் உள்ளிட்ட பல்வேறு வடமாநில சிறுவர்கள் பால் கடம்பு வியாபாரத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து, அங்குள்ள ஒரு குடிசையில் இருந்த 15 வயதுக்கு உட்பட்ட பீகாரை சேர்ந்த 5 சிறுவர்களை அதிகாரிகள் மீட்டனர்.

அவர்களை திருவொற்றியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் அவர்களை காசிமேட்டில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வடமாநில சிறுவர்களை குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தியவர்கள் யார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More