×

குலசை தசரா திருவிழாவில் நள்ளிரவில் சூரசம்ஹாரம்

தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் பக்தர்கள் இல்லாமல் கோயில் வளாகத்தில் நள்ளிரவில் சூரசம்ஹாரம் நடந்தது. இன்று மாலை கொடியிறக்கம், காப்புகளைதலுடன் விழா நிறைவு பெறுகிறது. மைசூருக்கு அடுத்தப்படியாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. கொரோனா தொற்று நோயின் காரணமாக அரசு, லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இத்திருவிழாவிற்கு பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா கடந்த 6ம்தேதி காலை பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவையொட்டி அம்மன் நாள்தோறும் பல்வேறு வேடங்களில் உள்திருவீதியுலா நடந்தது. 2ம்திருநாள் முதல் 9ம்திருநாள் வரை தினமும் இரவு வெவ்வேறு கோலங்களில் திருவீதியுலா வந்தார். தசரா திருவிழாவையொட்டி திருக்காப்பு அணிந்து வேடம் அணியும் பக்தர்கள் அம்மன், காளி, குரங்கு, குறவன், குறத்தி என பல்வேறு வேடங்கள் அணிந்து வீதியாக சென்று தர்மம் பெற்றும், தசரா குழுக்கள் அமைத்து கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் காணிக்கை வசூல் செய்து கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவர்.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மஹிசா சூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவில் இரண்டாவது முறையாக பக்தர்கள் யாருமின்றி கோயில் வளாகத்தில் நடந்தது. முன்னதாக கோயிலிருந்து பூஜை செய்யப்பட்ட சூலாயுதம் எடுத்து வந்து அபிஷேக மண்டபத்திலுள்ள உற்சவரிடம் வைத்து அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மகிசாசூரமர்த்தினி அவதாரத்தில் அம்மன் அபிஷேக மண்டபத்தில் பக்தர்கருக்கு காட்சியளித்தார்.

இரவு 11.30 மணியளவில் அபிஷேக மண்டபத்தில் இருந்து கோயிலை சுற்றி வலம் வந்து கோயிலின் வளாகத்தில் வைத்து முதலில் தன் முகத்துடன் வந்த மகிஷா சூரனை வதம் செய்த பின்னர் தொடர்ந்து சிங்க முகத்துடன் வந்த மகிஷாசூரனை வலம் வந்து சிங்க முகத்தையும் வதம் செய்த அம்மன் தொடர்ந்து எருமை மற்றும் சேவல் முகங்களுடன் வந்த மகிஷாசூரனை வதம் செய்து தீமையை அழித்து நன்மையை உலகிற்கு உணர்த்தினார். கோபத்தின் உச்சியில் இருக்கும் அம்மனை குளிர்விக்கும் பொருட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. சிறப்பு தீபாராதனைக்கு பிறகு அம்மன் கோயிலை சுற்றி வலம் வந்து கோயிலில் எழுந்தருளினார். தசரா திருவிழாவிற்கென விரதம் மேற்கொண்ட பக்தர்கள் இன்று மாலை 5 மணிக்கு கொடியிறக்க நிகழ்வுக்குப் பின் கையில் அணிந்திருக்கும் திருக்காப்புகளை கழற்றி விரதத்தை முடித்துக் கொள்வர்.


Tags : Surasamharam ,Kullam Dharara festival , Kulasai Dasara Festival
× RELATED பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில்...