விருத்தாசலம் அருகே மன்னம்பாடி- எடையூர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் போக்குவரத்து இன்றி தவிப்பு

விருத்தாசலம்:   விருத்தாசலம் அருகேயுள்ள மன்னம்பாடியில் இருந்து எடையூர், கோவிலூர் வழியாக பெண்ணாடம் செல்வதற்கான நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில் மன்னம்பாடிக்கும் எடையூருக்கும் இடையே உள்ள உப்போடையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதன் வழியாக விருத்தாசலம் தாலுகாவையும், திட்டக்குடி தாலுகாவையும் இணைக்கும்படி உள்ள இந்த நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக இந்த ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து தரைப்பாலம் மூழ்கியது.

 இதனால் எடையூர், கோவிலூர், சிறுமங்கலம், மதுரவல்லி மற்றும் மன்னம்பாடி, படுகளாநத்தம், விளாங்காட்டூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பெண்ணாடம் மற்றும் விருத்தாசலம் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கண்டப்பங்குறிச்சி வழியாக சுமார் 25 கிலோமீட்டர் சுற்றி விருத்தாசலம், பெண்ணாடம், வேப்பூர் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.  எனவே சுமார் 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன் கருதி உப்போடை தரைப்பாலத்தை அகற்றி விட்டு, மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்தமுறை இதற்கு சரியான தீர்வு இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: