×

சீரமைப்பு பணிகள் நிறைவு ஏற்காடு மலைப்பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதி: கலெக்டர் தகவல்

சேலம்:சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. கடந்த 11ம் தேதி ஏற்காடு மலைப் பகுதியில் அதிகளவு மழை பெய்ததால், மலைப்பாதையில் உள்ள 2வது மற்றும் 3வது கொண்டை ஊசி வளைவின் இடையே சுமார் 25 மீட்டர் உயரம் மற்றும் 15 மீட்டர் அகலத்திற்கு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக சீரமைப்பு பணி 12ம் தேதி முதல் பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள், பணியாளர்களை கொண்டு குவாரி மணல் மூட்டைகளை அடுக்கும் பணி நடந்தது. சீரமைப்பு பணிகள் கடந்த 14ம் தேதி மாலை நிறைவடைந்தது.

இதையடுத்து, பழுதடைந்த சாலை பகுதி சுமார் 75 மீட்டர் நீளத்திற்கு ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து, கனரக சரக்கு வாகனங்களை தவிர்த்து, பிற வாகனங்கள் மட்டும் ஏற்காடு மலைப் பாதையில் அனுமதிக்கப்பட்ட 30 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மேலும், கனரக சரக்கு வாகனங்கள் அனைத்தும், அயோத்தியாப்பட்டணம்-அரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் கிராமம் வழியாக ஏற்காடு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Yercaud Hill , Renovation work completed in Yercaud hills Permission for Transport: Collector Information
× RELATED ஏற்காடு மலைப்பாதையில் 3 நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ