×

தமிழ்நாடு காவல்துறை சார்பில் 2085 கி.மீ. தூர தேசிய ஒற்றுமை தின பைக் பேரணி: கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது

கன்னியாகுமரி : தமிழ்நாடு காவல்துறை சார்பில் கன்னியாகுமரியில் இருந்து தேசிய ஒற்றுமை தின பைக் பேரணி நேற்று காலை தொடங்கியது. ஏடிஜிபி அபய்குமார்சிங் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளான அக்டோபர் 31ம்தேதி தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் 4 திசைகளையும் ஒன்றிணைக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, குஜராத், திரிபுரா மாநிலங்களின் காவல்துறை சார்பில் தேசிய ஒற்றுமை தின வாகன பேரணி நடத்தப்படுகிறது. இந்த வாகன பேரணிகள் அந்தந்த மாநிலங்களில் இருந்து தொடங்கி, குஜராத் மாநிலத்தின் கவேடியா மாவட்டத்தில் நர்மதா நதி கரையில் அமைந்துள்ள  சர்தார் வல்லபாய் படேல் சிலையை சென்றடைகின்றன.

அதன்படி தமிழ்நாடு காவல்துறை சார்பில், இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து தேசிய ஒற்றுமை தின வாகன பேரணி நேற்று (15ம்தேதி) தொடங்கியது. கன்னியாகுமரி கடற்கரையில் உள்ள காந்தி மண்டபத்தின் முன்பிருந்து, தமிழ்நாடு சிறப்பு காவல் படை அதிகாரி டி.குமார் தலைமையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 25 வீரர்கள் மற்றும் 16 உதவியாளர்கள் 25 பைக்குகளில் புறப்பட்டனர். திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், ஒசூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் இவர்கள், ஹூப்ளி, ஹோல்கப்பூர் வழியாக புனே, தானே, சூரத், நர்மதா வழியாக சுமார் 2,085 கி.மீ. தூரம் பயணித்து வருகிற 24ம் தேதி நர்மதா நதிக்கரையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை சென்றடைகிறார்கள். மேலும் 31ம்தேதி அங்கு நடைபெறும் தேசிய ஒற்றுமை விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

 இந்த பேரணியை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவுறுத்தலின் படி, கூடுதல் காவல்துறை இயக்குனர் (சிறப்பு காவல்படை) அபய்குமார் சிங் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அரவிந்த், டி.ஜ.ஜி. பிரவீன்குமார் அபினபு, கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. (பொறுப்பு) மகேஸ்வரன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து ெகாண்டனர். ஏடிஜிபி அபய்குமார்சிங் பேசுகையில், நமது பெருமையை இதன் மூலம் நாம் நிலை நாட்டி உள்ளோம் என்றார். கலெக்டர் அரவிந்த் பேசுகையில், நமது நாட்டை ஒன்றிணைத்ததில், சர்தார் வல்லபாய் பட்டேல் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி போன்ற ஆட்சிப்பணிகள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல் என்றார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன், தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டன்ட் ஜெயபால், டி.எஸ்.பி.க்கள் ராஜா, நவீன்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

Tags : Tamil Nadu Police ,National Unity Day Bike Rally ,Kanyakumari , 2085 km on behalf of the Tamil Nadu Police. Distant National Unity Day Bike Rally: Started from Kanyakumari
× RELATED ஐதராபாத்தில் நடந்த பூப்பந்து...