திருச்சி தாராநல்லூரில் 20 வீடுகளுடைய ஸ்டோரின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி காயம்

திருச்சி: திருச்சி தாராநல்லூர் கிருஷ்ணாபுரம் அலங்கநாதபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(40). இவரது குடும்பத்திற்கு சொந்தமாக அதே பகுதி கிருஷ்ணாபுரத்தில் 20 வீடுகள் கொண்ட ஸ்டோர் உள்ளது. தரைதளத்தில் 10 வீடுகள் மற்றும் மேல் தளத்தில் 10 வீடுகள் இருந்தது. சுண்ணாம்பால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கட்டி 50 ஆண்டுக்கு மேல் ஆவதால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டிருந்தது. மேலும் இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது.இதனால் 13 வீடுகளில் வசித்தவர்கள் காலி செய்துவிட்டனர். தற்போது 7 குடும்பத்தினர் மட்டுமே வாடகைக்கு வசித்து வருகின்றனர். வாடகையும் சரிவர கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழமையான கட்டிடம் மேலும் தண்ணீரில் ஊறி சேதமடைந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு மாடியில் ஒரு பகுதியில் நடைபாதையுடன் பால்கனி சுவர் கைப்பிடி திடீரென இடிந்து சரிந்து கீழே விழுந்தது. அப்போது ஒரு வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருந்த ரங்கநாயகி(75) என்ற மூதாட்டி தலையின் மீது சிமென்ட் காரைகள் விழுந்தது. இதில் காயமடைந்த ரங்கநாயகி, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்த சம்பவத்தின்போது மற்ற குடியிருப்புகளில் இருந்த குடும்பத்தினர் வீட்டிற்குள் இருந்ததால் பெரும் அசம்பாவித சம்பவம் ஏற்படாத வகையில் தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் முற்றிலும் இடிந்துவிழும் நிலையில் வீடு உள்ளதால் அனைவரையும் உடனடியாக காலி செய்ய கூறி உத்தரவிட்டு, அந்த பகுதிக்குள் யாரும் செல்ல வகையில் சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More
>