கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை மீறி செயல்படுவதால் காற்று, நீர், நிலம் மாசுபடுகிறது: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை: கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் விதிகளை  மீறி செயல்படுவதால் காற்று,  நீர் மற்றும் நிலம் மாசுபடுவதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மற்றும் கழிவுநீர் காற்றிலும், நீரிலும் கலந்து மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் மற்றும் காற்று சட்டம் ஆகியவை இயற்றப்பட்டு, அவற்றின் கீழ் விதிகள் வகுக்கப்பட்டு, இவற்றை நடைமுறைப்படுத்தும் பணியினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இருப்பினும், மேற்படி சட்டங்களும், அதன்கீழ் வகுக்கப்பட்ட விதிகளும் தொடர்ந்து தொழிற்சாலைகளால் புறக்கணிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. சுற்றுச்சூழல் விதிகளை மீறி பல தொழிற்சாலைகள் செயல்படுவதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள காற்று, நீர் மற்றும் நிலம் மாசுபடுவதாகவும், உற்பத்தியின்போது வெளியேறும் புகை பல கட்ட செய்முறைகளுக்கு பிறகு உயரமான புகைபோக்கி மூலம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தாலும், இதனை எந்த தொழிற்சாலையும் கடைபிடிக்கவில்லை.  

மாறாக, கூரை வழியாக கரும் புகை வெளியேற்றப்பட்டு நச்சு புகையால் காற்று அசுத்தமாகிறது. இதன் காரணமாக காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த காற்றை சுவாசிக்கும்போது உடல் ரீதியான பல பிரச்னைகள் மக்களுக்கு ஏற்படுவதாக செய்திகள் வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விதிகளை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். அப்பகுதி மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்து, விதிகளை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: