‘கல்வான் வீடியோ’வில் பதற வைக்கும் காட்சி இந்திய ராணுவ வீரர்கள் படுகாயத்துடன் சீனா பிடியில் இருப்பது உண்மை தானா?: காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: ‘கல்வான் வீடியோ’வின் உண்மைத்தன்மை குறித்து அரசு மவுனமாக இருப்பது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: கல்வானில் தாக்கப்பட்ட நமது ராணுவ வீரர்கள் படுகாயத்துடன் சீன ராணுவ வீரர்களின் பிடியில் இருப்பது போன்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ திடுக்கிட வைக்கிறது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த போர் குற்றத்துக்காக சீனா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்.

பிரதமரும், ஒன்றிய உள்துறை அமைச்சரும் ஒருவரை ஒருவர் பாராட்டுவதை நிறுத்தி விட்டு, நமது வீரர்களுக்கு எதிரான இந்த போர் குற்றத்துக்கு சீனா பொறுப்பேற்பதை உறுதிப்படுத்த வேண்டும். மொத்தத்தில் சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அரசு என்ன பதில் அளிக்க போகிறது? சீனாவின் இந்த வீடியோ குறித்தும் அரசு மவுனம் சாதிப்பது ஏன்?

நமது எல்லைக்குள் ஊடுருவி தான் செய்யும் தவறுகளை வீடியோவாக வெளியிடும் சீனாவுடனான வர்த்தகத்தை வெட்கமில்லாமல் 62.7 சதவீதம் ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. இந்தியாவில் ரூ. 600 கோடி முதலீடு செய்ய கடந்த வாரம் சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. என்ன மாதிரியான நிர்வாகம், ஆட்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சித்துவுக்கு மீண்டும் பதவி

* பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய  நவஜோத் சிங் சித்து, கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இன்று செயற்குழு கூட்டம்

* காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில், கட்சியின் அமைப்பு தேர்தல், அடுத்தாண்டு நடக்கும் மாநில தேர்தல் உள்ளிட்ட பிரச்னைகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

Related Stories:

More
>