×

சட்டீஸ்கரில் பயங்கர சம்பவம் துர்கா பூஜை ஊர்வலத்தில் புகுந்த கார்: ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்

ஜாஸ்புர்: சட்டீஸ்கரில் துர்கா பூஜை ஊர்வலம் சென்றவர்கள் மீது தறிகெட்டு ஓடிய கார் பயங்கரமாக மோதியது. இதில் ஒருவர் பலியானார். 20 பேர் படுகாயமடைந்தனர். சட்டீஸ்கர் மாநிலம், ஜாஸ்புர் மாவட்டம், பாதல்கன் பகுதியை சேர்ந்தவர்கள் துர்கா தேவி சிலையை நீர்நிலையில் கரைக்க ஊர்வலமாக நேற்று எடுத்துச் சென்றனர். அப்போது, பயங்கர வேகமாக வந்த கார் ஒன்று, ஊர்வலத்தில் நுழைந்தது. இதில், பலர்  தூக்கி வீசப்பட்டனர். மக்கள் மீது மோதிய பிறகும் அந்த கார் வேகம் குறையாமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காரை விரட்டிக் கொண்டு சென்றனர்.

சிறிது தூரத்தில் அந்த கார் ஒரு பள்ளத்தில் தீப்பிடித்தபடி கிடந்தது. டிரைவர் இருக்கை கதவு திறந்திருந்தது. காரின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருந்தன. கார் மோதியதில், பாதல்கான் பகுதியை சேர்ந்த கவுரவ் அகர்வால் என்ற 21 வயது வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சமீபத்தில், உபி மாநிலம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகளின் மீது ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனின் ஆசிஷ் மிஸ்ராவின் கார் பயங்கர வேகத்தில் மோதி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அதே போன்ற சம்பவம் சட்டீஸ்கரில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊர்வலத்தில் கார் மோதும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது. இது தொடர்பாக விசாரித்த போலீசார், மத்தியப் பிரதேச மாநிலம், சிங்குராலி மாவட்டத்தை சேர்ந்த பாபுலு விஸ்வகர்மா (21), சிஷுபால் சாஹு (26) ஆகியோரை கைது செய்துள்ளனர். இவர்கள் சட்டீஸ்கர் வழியாக மத்திய பிரதேசத்துக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.

Tags : Chhattisgarh ,Durga Puja , Durga Puja, procession, car, injury
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...