மெரினாவில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க கடற்கரை உயிர்காப்பு பிரிவு அதிகாரியாக கூடுதல் டிஜிபி சந்திப் மிட்டல் நியமனம்: டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக காவல் துறை மானியக்கோரிக்கையின்போது, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க சென்னை மாநகர காவல் துறையில் ‘மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும்’ என அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து கடந்த 13ம் தேதி டிஜிபி சைலேந்திரபாபு தலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் இயக்குநர் சந்திப்மிட்டல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மெரினா கடற்கரையில் செயல்பட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை ஒருங்கிணைத்தும், கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் இயக்கும் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவில் கூடுதலாக 12 பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவர். கடந்த கால நிகழ்வுகள் அடிப்படையில் அண்ணாநினைவிடம், காந்தி சிலை மற்றும் எலியட் கடற்கரை பகுதிகளில் அதிக இறப்பு ஏற்பட்டு இருப்பதால் இப்பகுதிகளில் பாதுகாப்பு பயிற்சி பெற்ற உயிர்காப்பு படையினர் நிறுத்தப்பட வேண்டும் எனவும், கடற்கரையை பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகள் வழங்கவும், கண்காணிக்கவும் 5 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ முடிவு செய்யப்பட்டது.

காவல்துறையில் ஆயுதப்படை காவலர்கள் 50 பேருக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து அவர்களை கூடுதலாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. உயிர்காக்கும் நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பணியாற்றலாம். அவர்களை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 004-28447752 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

Related Stories:

More