×

உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக்கல்வியை அதிகமாக பெருக்குவதே அரசின் இலக்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  இன்றைய ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி  அதிகமாக பல்கிப் பெருக வேண்டும்.   தமிழ்நாடு அரசு இந்த இலக்கை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது என கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற  உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கனிமொழி, வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள்  எழிலன், இனிகோ இருதயராஜ், லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்தின் இயக்குர் ஜோ.அருண், மதுரை இயேசு சபை மாநிலத் தலைவர் ஜே.டேனிஸ் பொன்னையா, சென்னை இயேசு  சபை மாநிலத் தலைவர் செபமாலை இருதயராஜா, லயோலா கல்லூரி கல்வி நிறுவனங்களின்  அதிபர் பிரான்சிஸ் பி.சேவியர், ஆதித்ய பிர்லா குழுமத்தின் நிர்வாகத்  தலைவர் சிவ சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  ஒவ்வொரு முறையும் நான் சட்டமன்ற உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்த லயோலா கல்லூரியில் வாக்கு எண்ணப்பட்டு,  அங்கிருந்துதான் அறிவிப்பு வந்தது. என்னுடைய  வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் எத்தனையோ இருந்தாலும், இந்தக் கல்லூரியை நிச்சயமாக மறக்கமுடியாது என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். லயோலாவில்  இயங்கக்கூடிய  இந்த லிபா நிறுவனம் கடந்த 42 ஆண்டுகாலமாக  பல தொழில் நிறுவனத்  தலைவர்களை உருவாக்கியிருக்கிறது.  கல்வியுடன் சேர்ந்து சமூக அக்கறையையும் ஊட்டும் கல்வியாக அதனைப் புகட்ட வேண்டும். அப்படி புகட்டும் நிறுவனமாக லயோலா போன்ற நிறுவனங்கள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக  ஏழை, எளிய, சிறுபான்மையின மக்களுக்கும், பட்டியலினக் குடும்பங்களில் இருந்து வரக்கூடிய பயில்கிற மாணவர்களுக்கும் நிதியுதவி அளித்து, அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி இந்த லிபா நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதே சிந்தனையோட்டத்தில் செயல்படும் லிபா நிறுவனம் இப்போது ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறது, இதனை வெறும் கட்டிடமாக நான் பார்க்கவில்லை. ஏழை, எளிய, சிறுபான்மையின, பட்டியலின மக்களின் கலங்கரை விளக்காக நான் பார்க்கிறேன். திமுக வளர்ந்ததே கல்லூரிகளில்தான். அதனால்தான், கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகமான கல்லூரிகளை உருவாக்கியிருக்கிறோம், இப்போதும் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். பெருந்தலைவர் காமராசர் காலத்தில் பள்ளிகள் அதிகம் உருவாக்கப்பட்டது. தலைவர் கலைஞர் காலத்தில் கல்லூரிகள் அதிகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி அதிகமாக பல்கிப் பெருக வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.  தமிழ்நாடு அரசு இந்த இலக்கை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்ற இலக்கை நாம் எளிதாக அடைந்துவிட்டோம். அனைவருக்கும் ஏதாவது ஒரு பட்டம் என்ற இலக்கையும் விரைவில் அடைந்துவிடுவோம். அனைவரும் உயர்கல்வி கற்றவர்களாக வளர வேண்டும்; வாழவேண்டும்.

அந்த இலக்கை எட்டிய முதல் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வளர வேண்டும். அதற்கு லயோலா போன்ற நிறுவனங்களும் தங்களது அறிவுப் பணியைத் தொடர வேண்டும். புதிய புதிய படிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டும். அதனை நோக்கி மாணவர்களை ஈர்க்க வேண்டும். அத்தகைய பட்டம் பெற்றவர்கள், உலகம் முழுவதும் உள்ள தொழில்களை, வேலைவாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும். தமிழர்கள் தங்களது அறிவால் -  திறமையால் - கல்வியால் -  வேலைவாய்ப்பால் உலகளாவிய பெருமையை அடைய வேண்டும். அதற்கு லயோலா போன்ற கல்வி நிறுவனங்கள் உறுதுணையாக நிற்க வேண்டும்.தொழில்முனைவோர்களை  உருவாக்குகிற  இதுபோன்ற  மேலாண்மை கல்வி நிறுவனங்கள் நமது நாட்டில் பெருகிட வேண்டும். என்னைப் பொறுத்தவரையில், ஒரு கல்வி நிறுவனம், வெறுமனே வேலையாட்களை உருவாக்குவதைவிட; சமூகத்தையும், தொழில்சார்ந்த நிறுவனங்களையும் முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்துகிற தலைவர்களையும் உருவாக்கிட நீங்கள் உதவிடவேண்டும்.

நம் ஆட்சி அமைந்து, 100 நாட்களில் பலநூறு திட்டங்களை அறிவித்து, அவற்றைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். இருண்ட நிலையில் வீழ்ந்து கிடந்த தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் ஒரு ஒளிமயமான பாதையில் வீறுநடை போட வைத்திருக்கிறோம். சமூகநீதிகொண்ட பொருளாதார வளர்ச்சியை உருவாக்க நினைக்கிறோம். அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்கிற அரசாக நம்முடைய அரசு நிச்சயம் அமையும். இதன் காரணமாக தமிழ்நாட்டை இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநிலமாக மாற்றறிக் காட்டுவோம். அந்த மாற்றத்திற்கு, முன்னேற்றத்திற்கு நீங்கள் ஒவ்வொருவரும் உதவிடவேண்டும். பத்து மாநிலங்களைக் குறிப்பிட்டு, அதில் முதலிடத்தில் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்று பெருமையாகச் சொன்னார்கள், இது எனக்கு பெருமை இல்லை. நம்முடைய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது என்ற பெருமைதான் எனக்கு உள்ளபடியே பெருமிதம் தரும். அதற்கு நீங்கள் எப்போது எங்களுக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Tags : Chief Minister ,MK Stalin , Government aims to increase higher education, vocational education and research education: Chief Minister MK Stalin
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...