×

8 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பட்டாசு விற்பனை தடையை நீக்க வேண்டும்: 4 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் தயாராகும் பட்டாசுகளை விற்பனை செய்ய விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடையை, மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், அரியானா மாநில முதல்வர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று தங்களுக்கு தெரியும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை சார்ந்தே தமிழக அரசின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளன.  எனது அரசு தற்போது இந்த துறைகளுக்கு முக்கியத்துவம் தந்துவருகிறது. சிவகாசி மற்றும் அந்த நகரை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தொழில் தமிழகத்தின் மிக முக்கிய தொழிலாகும். நாட்டிலேயே அதிக அளவில் பட்டாசு தயாரிக்கும் சிவகாசி பட்டாசு தொழிலை சார்ந்து சுமார் 8 லட்சம் பேர் உள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளி விழாக்களில் பட்டாசுகள் விற்பனைக்கு தடை விதித்து உங்களது அரசுகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. காற்று மாசு ஏற்படும் என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை தாங்கள் எடுத்துள்ளதாக அறிகிறேன். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே சில வகையான பட்டாசுகளுக்கு தடை விதித்துள்ளது. காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. எனவே, சரியான காரணங்கள் இல்லாமல் ஒட்டுமொத்தமாக பட்டாசுகளுக்கு தாங்கள் தடை விதித்திருப்பது சரியானதல்ல. இதுபோன்ற தடை உத்தரவுகள் எந்த நாட்டிலும் இல்லாத ஒன்றாகும்.

மற்ற மாநிலங்களிலும் இதே போல் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டால் 8 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள பட்டாசு தொழிலை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். தீபாவளி போன்ற இந்திய பண்டிகைகளில் பட்டாசு வெடிப்பது ஒரு முக்கிய நிகழ்வாக உள்ளது. சுற்றுச்சூழலை பார்ப்பதுபோல் வாழ்வாதாரம், பொது சுகாதாரத்தையும் சமமாக கருத வேண்டும். எனவே, பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக விதித்துள்ள தடையை மறு பரிசீலனை செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை தங்களது மாநிலங்களில் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : TN ,Q. Stalin , Tamil Nadu Chief Minister MK Stalin's letter to 4 Chief Ministers to lift ban on sale of firecrackers affecting the livelihood of 8 lakh people
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை