அண்ணா மேலாண்மை நிலையம் இனி அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும்: தலைமைச் செயலாளர் இறையன்பு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைப் பயிற்சி நிறுவனமாக சென்னையிலுள்ள அண்ணா மேலாண்மை நிலையம் இயங்கி வருகிறது. அண்ணா மேலாண்மை நிலையம், அ, ஆ பிரிவினருக்கான அடிப்படைப் பயிற்சி நிலையம், அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி நிலையம், பவானிசாகரில் அமைந்துள்ள குடிமைப் பணியாளர்கள் பயிற்சி நிலையம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுடைய பயிற்சிகளை நிறைவேற்றி வருகின்றன. அண்ணா மேலாண்மை நிலையத்தில் இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய ஆட்சிப் பணியாளர்கள் வரை அனைவருக்குமான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவ்வப்போது துறை அலுவலர்களுக்கு அலுவலக நடைமுறை, தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஒழுங்கு நடவடிக்கை விதிகள், மன அழுத்த மேலாண்மை, குழு மேலாண்மை, ஓய்வுக்கு முந்தைய ஆலோசனை, நேர மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, தலைமைப் பண்புகள் போன்ற பல தலைப்புகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஆதிதிராவிட மாணவர் விடுதியின் காப்பாளர்களுக்கும்  பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்களுக்கும் அலுவலக நடைமுறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அரசுத் துறைகள் நீதிமன்ற வழக்குகளை உரிய முறையில் அணுகுவதற்கு வழக்குகள் மேலாண்மை  பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் இதுநாள்வரை அண்ணா மேலாண்மை நிலையம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மேலாண்மை நிலையம் என்று அழைக்கப்படுவதால் இந்நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தெளிவின்மை ஏற்பட்டது. இது அரசு நிர்வாகப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனம்தான் என்பதைக் கருத்தில் கொண்டு இதன் பெயரை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணியாளர் கல்லூரி என்றே பிற மாநிலங்களில் உள்ள இத்தகைய பயிற்சி நிறுவனங்கள் அழைக்கப்பட்டு வருகின்றன. எனவே இனி அண்ணா மேலாண்மை நிலையம் என்பதற்குப் பதிலாக ‘அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி’ என்று அழைக்கப்படும் என தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>