×

மேற்குவங்கம், பஞ்சாப், அசாம் மாநிலங்களில் பிஎஸ்எப்... இனிமேல் 50 கி.மீ வரை உள்ளே சென்று தூக்கலாம்!: உள்துறையின் உத்தரவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: மேற்குவங்கம், பஞ்சாப் மற்றும் அசாமில் எல்லைப் பாதுகாப்புப்  படையின் அதிகார வரம்பை ஒன்றிய அரசு விரிவுபடுத்தியதை அசாம் மாநிலம் வரவேற்றும், பஞ்சாப் மற்றும் மேற்குவங்க மாநிலங்கள் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன. சர்வதேச எல்லைகளை ஒட்டியுள்ள மாநிலங்களில் எல்லை பாதுகாப்பு படை எனப்படும் பிஎஸ்எப் பிரிவு போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், அண்டை நாடுகளில் இருந்து தப்பி வருவோரையும், சட்டவிரோதமாக குடியேறுவோரையும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பர். எல்லையில் ஊடுருவலை கட்டுப்படுத்த, எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் மேற்குவங்கம், பஞ்சாப், அசாம் எல்லையில் பணியாற்றும் எல்லை பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது.  மேற்கண்ட மூன்று மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ. தூரம் என்பதற்கு பதிலாக 50 கி.மீ. தூரம்  வரை தேடுதல், பறிமுதல், கைது நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான, சட்ட நடவடிக்கை ஒன்றிய அரசு எடுத்துள்ளதற்கு மேற்குவங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், இந்த முடிவை அசாம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘புதிய உத்தரவின்படி பஞ்சாப், மேற்குவங்கம், அசாமில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து 50 கி.மீ சுற்றளவில் தேடுதல், பறிமுதல், கைது நடவடிக்கையை எல்லைப் பாதுகாப்புப் படை மேற்கொள்ளும்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள குஜராத் பகுதிகளில் 80 கிலோ மீட்டரில் இருந்து 50 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில், 50 கி.மீ வரை உள்ள பகுதி வரம்பில் எந்த மாற்றமும் இல்லை. இந்த உத்தரவின் மூலம் பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டினரை பதிவு செய்தல் சட்டம், மத்திய கலால் சட்டத்தின் கீழ் எல்லைப் பாதுகாப்புப் படை நடவடிக்கை எடுக்க முடியும். வெளிநாட்டுச் சட்டம், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், சுங்கச் சட்டம் அல்லது வேறு எந்த மத்தியச் சட்டத்தின் கீழும் தண்டனைக்குரிய எந்தக் குற்றத்தையும் தடுத்து நடவடிக்கை எடுக்க எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அதிகாரம் உண்டு. மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய ஐந்து வடகிழக்கு மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு 30 கி.மீ. ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச எல்லைகளை ஒட்டியுள்ள பஞ்சாப், மேற்குவங்காளம், ஜம்மு -காஷ்மீர், அசாம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வழியாக கடத்தல் மற்றும் போதைப்பொருள் ஊடுருவல் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் மற்றும் ஊடுருவல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், எல்லைப் பாதுகாப்பு படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எல்லைப் பாதுகாப்பு படையின் சாதாரண அதிகாரியும், சந்தேகப்படும் நபரை கைது செய்ய முடியும்’ என்றன.

ஆதரவும் எதிர்ப்பும்
* அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில், ‘எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பு விரிவாக்கத்தை வரவேற்கிறேன். மாநில போலீசாருடன் இணைந்து ஒருங்கிணைப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை தாண்டிய கடத்தல் மற்றும் சட்டவிரோத ஊடுருவலை கட்டுப்படுத்த முடியும். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய நலனை மேலும் வலுப்படுத்த முடியும்’ என்றார்.
* திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். இது, மாநில உரிமைகளின் மீதான அத்துமீறல்; மாநில அரசுக்கு தெரிவிக்காமல் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகார வரம்பை விரிவுபடுத்த வேண்டிய அவசரத் தேவை ஏன்? எல்லைப் பாதுகாப்புப் படை எங்காவது சோதனைகளை நடத்த வேண்டும் என்றால், மாநில காவல்துறையுடன் இணைந்துதான் செயல்படுத்த வேண்டும்’ என்றார்.
* மேற்குவங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையின் தீய விளைவுகளை ஏற்படுத்தும். எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பை விரிவுபடுத்துவது, மாநில உரிமைகளில் தலையிடுவதாகும். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில நிர்வாகத்தை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்’ என்றார்.  
* பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் துணை முதல்வர் சுக்விந்தர் சிங் ரந்தாவா ஆகியோர் கூறுகையில், ‘ஒன்றிய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும். மாநில கூட்டாட்சி மீதான தாக்குதலாகும்’ என்றனர். அதேநேரம் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு ஆதரவு கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, ‘அரசியலமைப்பின் அதிகாரத்தை பாஜக அரசு ஆக்கிரமிக்கிறது’ என்றார்.

பிஎஸ்எப் ஐஜி விளக்கம்
எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி.எஸ்.எப்) ஐஜி சாலமன் மின்ஸ் கூறுகையில், ‘எல்லைப் பகுதியில் சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்பு படையை பொருத்தமட்டில், மாநில காவல்துறையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்படுகிறது. எல்லைப் பாதுகாப்புப் படையின் எல்லைப் பாதுகாப்பு என்பது உள்நாட்டு பாதுகாப்பின் ஒரு பகுதியாகும் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒன்றிய அரசின் இந்த உத்தரவின் நோக்கம், எல்லை தாண்டிய குற்றங்களையும் கட்டுப்படுத்துவது மட்டுமே நோக்கமாகக் கொண்டது’ என்றார்.

Tags : PSF ,Punjab ,Asam ,Congress , BSF, Home Order, Congress, Trinamool, Strong Opposition
× RELATED ஐபிஎல்: பெங்களூரு – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்