ஹெல்மெட் கட்டாயம் உத்தரவு அமல் முதல் நாளில் 2000 வாகனங்கள் பறிமுதல்

ஈரோடு :  ஈரோடு மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவையடுத்து நேற்று முதல் நாளிலேயே 2000 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வகையிலும், சாலை பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு, போதிய விழிப்புணர்வும் போலீசார் மூலம் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் 13ம் தேதி (நேற்று) முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், இல்லை என்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எஸ்பி சசி மோகன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, கோபி, சத்தி, பவானி ஆகிய 5 போலீஸ் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் டிஎஸ்பிக்கள் தலைமையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நேற்று தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு, ஹெல்மெட் அணிந்து வராத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதில், ஈரோடு மாநகரில் பன்னீர்செல்வம் பார்க் சந்திப்பில் டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமார் தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கதிரவன், டவுன் எஸ்ஐ செல்வம் மற்றும் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு அவ்வழியாக ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் சென்ற ஆண், பெண் பேதமின்றி நிறுத்தி வழக்கு பதிவு செய்து, அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், காளைமாட்டு சிலை, கொல்லம்பாளையம், அரசு மருத்துவமனை ரவுண்டானா, சென்னிமலை ரோடு, சூரம்பட்டி நால் ரோடு, கலெக்ரேட் சந்திப்பு, பவானி ரோடு, காவேரி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டு, ஹெல்மெட் அணியாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள அரசு பள்ளி வளாகத்திலும், காலி இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர், அபராதம் செலுத்திய ரசீதினை வாகன ஓட்டிகள் போலீஸ் அதிகாரிகளிடம் காண்பித்து, தங்களது வாகனங்களை ஹெல்மெட்டுடன் வந்து ஓட்டி சென்றனர்.

இதில், மாவட்டத்தில் மதியம் 2 மணி நிலவரப்படி 5 போலீஸ் சப் டிவிசன்களிலும் 2,175 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அபராத தொகை செலுத்தி, ஹெல்மெட்டுடன் வருபவர்களுக்கு சில மணி நேரத்தில் அவர்களது வாகனத்தை திரும்ப ஒப்படைத்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: