வித,விதமான சிலைகள் நேர்த்திக்கடன் வாகைகுளம் அய்யனார் கோயில் புரட்டாசி பொங்கல் விழா

திருமங்கலம் : வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோயிலில் புகழ்பெற்ற புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி பல்வேறு விதமான சிலைகளை பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தினர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள வாகைகுளம் கிராமத்தில் அய்யனார் கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் புரட்டாசி பொங்கல் திருவிழா தென்மாவட்ட அளவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி கடைசி செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வேண்டிக்கொண்டதை பொம்மை வடிவிலான சிலைகள் செய்து கோயிலுக்கு வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று பக்தர்கள் நேர்த்திக்கடனாக ஆசிரியர்சிலை, ராணுவவீரர் சிலை, ஆடு, மாடு சிலைகள், நாகர்சிலை, பஸ், லாரி, டிராக்டர் உள்ளிட்ட விதவிதமான சிலைகளுடன் ஊர்மந்தையில் கூடினர். அங்கு அய்யனார் மற்றும் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் அங்கிருந்து சிலைகளுடன் தலைச்சுமையாக எடுத்து கொண்டு மந்தையை மூன்று சுற்றுகள் சுற்றி கண்மாய் கரையில் உள்ள கோயிலிலுக்கு நடந்து சென்று சிலைகளை நேர்த்திக்கடனாக வழங்கினார்.அங்கு நடந்த சிறப்பு பூஜையின் போது பக்தர்கள், வாழைப்பழம், லட்டு உள்ளிட்ட பொருள்களை சூறைவிட்டனர். மதுரை மாவட்டம் மட்டுமின்றி தேனி, விருதுநகர், ராமநாதபுரம், கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து திருப்பூரைச் சேர்ந்த பக்தர் சிவசாம்பவி கூறுகையில், வாகைகுளம் அய்யனார் கருப்பசாமி கோயில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோயிலில் வந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை வேண்டிகொண்டால் உடனடியாக நடைபெறும். அரசு ஊழியர் பணி, போலீஸ் மற்றும் ராணுவவீரர் பணி வேண்டும் என வேண்டிகொண்டால் உடனடியாக கிடைத்துவிடும். இதேபோல் விஷஜந்துகள் நடமாட்டம் இருக்கக்கூடாது என நாகர் சிலையை நேர்த்திக்கடனாக செலுத்துவர்.

விவசாயம் செழிக்க டிராக்டர், கால்நடைகளை சிலைகளாக செய்து வழங்குவர். குழந்தை வரம்வேண்டி நேர்த்திக்கடன் செய்யும் பெண்கள் குழந்தையுடன், தாய் சிலையை நேர்த்திகடனாக செலுத்துவர். பக்தர்களின் நேர்த்திக்கடன் நிறைவேறியவுடன் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சிலைகளை செய்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் என்றார். புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிலைகள் வடிவமைக்கும் தொழிலை நான்கு தலைமுறையாக செய்துவரும் அண்ணாமலை கூறுகையில், நேர்த்திக்கடனுக்கு செய்யும் சிலைகளை வாகைகுளம் கிராமமண்ணில் தான் செய்யமுடியும். மற்ற கிராமத்து மண்ணில் செய்ய இயலாது. கருப்பசாமி, விநாயகர் உள்ளிட்ட சாமிசிலைகளுடன், ஆசிரியர், ராணுவவீரர், பஸ்டிரைவர் உள்ளிட்ட அரசுபணி சார்ந்த சிலைகளையும் செய்து வருகிறோம் என்றனர்.

Related Stories:

More
>