ஸ்ரீபெரும்புதூரில் துப்பாக்கிமுனையில் பெண்களிடம் வழிப்பறி: என்கவுன்டர் செய்யப்பட்ட கொள்ளையனின் சகோதரனை பிடிக்க தனிப்படை அமைப்பு: எஸ்பி வருண்குமார் தீவிர தேடுதல் வேட்டை

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூர் கிராமம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் இந்திரா (58), சுங்கச்சாவடி ஊழியர். சென்னை நுங்கம்பாக்கத்தில் தனது சகோதரியை பார்க்க கடந்த 9ம் தேதி காலை பென்னலூர் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நின்றார். அப்போது, 2 வடமாநில வாலிபர்கள் முகவரி கேட்பதுபோல துப்பாக்கி முனையில் இந்திராவின் 5 சவரன்  செயினை பறித்து சென்றனர். அப்போது கொள்ளையர்களை பிடிக்க முயன்ற வாலிபர் ஒருவரை மிரட்டியும், வானத்தை நோக்கி 10 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டும் அருகில் உள்ள ஏரியில் புகுந்து தப்பினர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சுதாகர் தந்தை காலமானார். இதனால் எஸ்பி சுதாகர் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். தொடர்ந்து, வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ் குமார் குற்றவாளிகளை பிடிக்க திருவள்ளூர் மாவட்ட எஸ்பியாக உள்ள வருண்குமாரை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி பொறுப்பை கூடுதலாக கவனிக்க உத்தரவிட்டார். அதன்படி எஸ்பி வருண்குமார் கூடுதல் பொறுப்பாக பதவியேற்று, துப்பாக்கி முனையில் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் முழு கவனம் செலுத்தி விசாரணை நடத்தினார். கடந்த 4 மற்றும் 8ம் தேதிகளில் தனியாக சென்ற பெண்களிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

சம்பவ இடங்களில் சுற்றி வந்த வடமாநில நபர்கள் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. துப்பாக்கி முனையில் திருவள்ளூர் மாவட்ட குற்ற வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நயீம் என்பவனை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் துப்பாக்கி முனையில் வழிப்பறி செய்தது இவனது கூட்டாளியான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தசா சேக் மற்றும் அவனது சகோதரன் மத்புல் சேக் என தெரியவந்தது. உடனே சம்பவம் குறித்து எஸ்பி வருண்குமார், ஐஜி சந்தோஷ் குமார் மற்றும் டிஐஜி சத்யபிரியாவுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் உத்தரவுப்படி எஸ்பி வருண் குமார் குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு பயிற்சி பெற்ற போலீசார் உதவியுடன் பெரும்புதூர் சுற்றியுள்ள கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார். அப்போது மேவளூர்குப்பம் கிராமத்தை ஒட்டிய காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த கொள்ளையன் முர்தசா சேக்கை பிடிக்க முயன்றனர்.அவன் கையில் துப்பாக்கி இருந்ததால் போலீசாரை கத்தியால் வெட்டியும் துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியும் ஓடினார். இதில் தலைமை காவலர் மோகன்ராஜ் என்பவருக்கு கையில் வெட்டு காயம் ஏற்பட்டது. உடனே எஸ்பி வருண்குமார் தலைமையிலான போலீசார் ஜார்கண்ட் கொள்ளையன் முர்தசா  சேக்கை தற்பாதுகாப்புக்காக என்கவுன்டர் மூலம் சுட்டு கொன்றனர். பிறகு கொள்ளையன் குறித்து துப்பு கொடுத்த நயீம் கூறியபடி காரந்தாங்கல் கிராமத்தில் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்ட முர்தசா சேக் மற்றும் அவனது சகோதரன் மத்புல் சேக் தங்கி இருந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் போலீசார் வருவதை அறிந்த மத்புல் சேக் துப்பாக்கியுடன் தப்பி ஓடிவிட்டான்.

இதற்கிடையே என்கவுன்டரில் சுடப்பட்ட முர்தசா சேக் சம்பவம் குறித்து ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், என்கவுன்டர் செய்யப்பட்ட முர்தசா சேக் உடல், ஆர்டிஓ முன்னிலையில் அரசு மருத்துவமனையில் வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கில் கையில் துப்பாக்கியுடன் தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் மத்புல் சேக்கை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மத்புல் சேக் தனது சொந்த மாநிலமான ஜார்கண்ட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தனிப்படை ஒன்று ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று கொள்ளையனை தேடி வருகின்றனர்.

Related Stories:

More