×

பைசா செலவில்லாமல் மாவட்ட கல்வி அதிகாரிகள் 110 பேருக்கு பணியிட மாறுதல்: அமைச்சர் அதிரடி நடவடிக்கை

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை எப்போதும் நடக்காத அளவில்,  அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எடுத்த அதிரடி நடவடிக்கையால், பைசா செலவில்லாமல் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள்  பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.  பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பொது பணியிட மாறுதல் நடத்தி அவர்கள் விரும்பும் இடங்களுக்கே மாறுதல் வழங்கும் முறை தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்தது. இந்த பணியிட மாறுதலில் தகுதியுள்ள ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மாறுதல் பெற்று செல்ல முடிந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த பணியிட மாறுதல் பல குளறுபடிகளுடன் நடந்தது. நிர்வாக காரணங்கள் என்று சொல்லி பலர் முறைகேடாக பணியிட மாறுதல் பெற்றதாகவும் புகார்கள் வந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு  ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவிய கொரோனா தொற்று காரணமாக ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சலிங் நடத்த முடியாமல் போனது.
தற்போது கிருமி தொற்று குறைந்துள்ளதால் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது. ஏற்கனவே, 9 முதல் பிளஸ் 2 வகுப்புகள் நடக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) மற்றும் அதையொத்த பணியிடங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்குவதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதன்பேரில், சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என்று பல்வேறு அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.  இதையடுத்து, பூஜ்ய பணியிடம் காண்பிக்கப்பட்டு, சீனியாரிட்டி அடிப்படையில் மாறுதல் கவுன்சலிங் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (12ம் தேதி) மாலை 5 மணி அளவில் மேற்கண்ட கவுன்சலிங் ஆன்லைன் மூலம் நடந்தது. அதில், 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் சீனியாரிட்டி  முறையின் கீழ் பணியிட மாறுதல் உத்தரவுகள் பெற்றனர். அவர்கள் உடனடியாக அந்தந்த பணியிடங்களில் சேர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆணையை ரத்து செய்யவோ மாற்றம் செய்யவோ கோரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும், மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் மாறுதல் வழங்கப்படுவதால் மாறுதல் பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது என்றும் பள்ளிக் கல்வி  ஆணையர் தெரிவித்துள்ளார்.

பணியிட மாறுதல் தொடர்பாக எந்த முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் கவுன்சலிங் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் அவர் அதிரடியாக எடுத்த நடவடிக்கையால் மேற்கண்ட 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் சீனியாரிட்டி அடிப்படையில் எந்த ‘செலவும்’ செய்யாமல், யாரையும் ‘கவனிக்காமல்’ பணியிட மாறுதல் பெற்றதாக தெரிவித்தனர். இனி வரும் ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சலிங்கும் மேற்கண்ட முறையில் நடக்கும் என்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Tags : Education Officers, Minister, Action
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...