மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுகவை விட காங்கிரஸ், விசிக அதிக இடங்களில் வெற்றி: 3வது பெரிய கட்சியாக காங்., தொடர்வதால் கட்சியினர் உற்சாகம்: பாமக, பாஜ ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை: மநீம, நாம் தமிழர் கட்சிகளும் படுதோல்வி

சென்னை: 9மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திமுகவை தொடர்ந்து, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக தொடர்கிறது. இதனால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுகவை விட காங்கிரஸ், விசிக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன. இதில் 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தன. கடந்த 6ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவாகின. 2ம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்து பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் அடுத்தபடியாக காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 30 ஒன்றிய கவுன்சிலர்களையும், 5 மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் தங்கள் வசப்படுத்தியுள்ளது. பாமக, பாஜவை விட காங்கிரஸ், விசிக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளதால் தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக காங்கிரஸ் தொடர்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் காங்கிரசார் உற்சாகமடைந்துள்ளனர். அதுவும் குறிப்பாக, மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுக 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

அதேநேரம் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் 6 மாவட்ட கவுன்சிலர்களை கைப்பற்றியுள்ளது. அதாவது, தென்காசி மாவட்டத்தில் 3 மாவட்ட கவுன்சிலர்களையும், திருநெல்வேலி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடங்கள் என மொத்தம் 6 மாவட்ட கவுன்சிலர் பதவி காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. இதனால் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் அதிமுகவை விட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று முந்தியுள்ளது.  திமுக கூட்டணியில் 4 மாவட்ட கவுன்சிலர் இடங்களை பெற்ற விசிக 3 இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜவும், அக்கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்ட பாமகவுக்கு ஒரு மாவட்ட கவுன்சிலர் இடம் கூட கிடைக்கவில்லை. மேலும், தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் எந்த ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் இத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. ஆக மொத்தம் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>