×

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களை திரட்டும் முதல்வர்: ஒடிசா முதல்வருடன் கனிமொழி எம்பி சந்திப்பு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக மாநிலங்களை திரட்டும் முதல்வரின் முயற்சியாக, நேற்று ஒடிசா முதல்வரை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.  மருத்துவ படிப்பில் சேருவதற்கு நடத்தப்படும் நீட் தேர்வு திமுக ஆட்சிக்கு வந்த பின் ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் கட்ட நடவடிக்கையாக திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு நின்று விடாமல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜ ஆட்சியில் அல்லாத 12 மாநிலங்களை நீட் தேர்வுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் வகையில் ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில் நேற்று திமுக மாநில மகளிரணிச் செயலாளரும், திமுகவின் நாடாளுமன்ற குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்பி, ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து மொழி பெயர்க்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையையும் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எழுதிய கடிதத்தையும் வழங்கினார்.  இதேபோன்று, திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகனும், மாநில தொழில் துறை அமைச்சருமான கே.டி.ராமாராவை நேரில் சந்தித்து, தமிழக முதல்வரின்  கடிதத்தையும், நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளையும் இணைத்து வழங்கினார். அப்போது, திமுக மருத்துவ அணி இணைச் செயலாளரும், வடசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வீராசாமி உடனிருந்தார்.

Tags : Chief Minister ,Kanimozhi ,Odisha , Neet
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...