×

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 17ம் தேதி வரை மழை பெய்யும்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்டுவரும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 80 மிமீ மழை பெய்துள்ளது. ராசிபுரம், செங்கல்பட்டு 70மிமீ, தாமரைப்பாக்கம், சீர்காழி, கொரட்டூர் 60 மிமீ, மழை பெய்துள்ளது. இதையடுத்து வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கனமழையும்  பிற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். இதே நிலையில் 17ம் தேதி வரை தமிழகத்தில் மழை நீடிக்கும்.

இதற்கிடையே அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 15ம் தேதி ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தென் மேற்கு வங்கக் கடல், குமரிக் கடல் மற்றும் மன்னார்  வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் எனவே மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags : Tamil Nadu , Rain
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...