×

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் விவகாரம்: கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு விரைவில் அனுப்ப வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து  செய்துவிட்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்  அடிப்படையில் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடத்த வேண்டும் என்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு விரைந்து அனுப்பும்படி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார். நீட் தேர்வுக்கு எதிராக கடந்த நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த குழுவினர் பல்லாயிரக்கணக்கானவர்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தனர். அவர்களின் கருத்துகளை ஆராய்ந்து, தனது விரிவான பரிந்துரைகளை நீதிபதி ஏ.கே.ராஜன் குழு 14-7-2021 அன்று தமிழக அரசிடம் அளித்தது.

அந்த பரிந்துரையில், ‘‘சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவ கல்வியை பெறும் கனவிற்கு இடையூறாகவும், சமூக பொருளாதாரத்தில் வளமிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து, எம்.பி.பி.எஸ். மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் உள்ள பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து கடந்த மாதம் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். அதில், ‘‘தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி பாடத் திட்டம் போதுமான தரத்தில் இருக்கும் சூழலில், தகுதி தேர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் சேர்க்கையானது எந்த வகையிலும் கல்வியின் தரத்தை குறைத்துவிடாது. பள்ளி தேர்வு மதிப்பெண்கள் நெறிப்படுத்துதல் முறை மூலமாக சரிசெய்யப்பட்டால் அது முறையான, நியாயமான மற்றும் நடுநிலையான சேர்க்கை முறையை வழங்கும்.

இந்த புதிய சட்டமுன்வடிவில், மருத்துவ இளநிலை படிப்பில் அரசு ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு செய்யும் இடங்கள் ஆகியவற்றிற்கு 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த முன்மொழியப்படுகிறது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு செய்யவும் முன்மொழியப்படுகிறது.  உயர்மட்ட குழுவின் பரிந்துரையை கவனமாக பரிசீலித்த பின்பு, சமூகநீதியை உறுதிசெய்யவும், சமத்துவம் மற்றும் சம வாய்ப்புகளை நிலைநிறுத்தவும், பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மாணவர்களை பாதுகாக்கவும், மாநிலத்தில் முக்கியமாக கிராம பகுதிகளில், வலுவான சுகாதார கட்டமைப்பை உறுதி செய்யவும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கையை மேற்கொள்ள இந்த சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இந்த சட்ட மசோதா அனைத்துக்கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல்  பெற ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக, அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பார்வைக்கு அனுப்பி  வைக்கப்பட்டது. இந்த சட்டத்தை தமிழக ஆளுநர் பரசீலனை செய்து வருவதாக கூறப்பட்டது. ஆனாலும் இதுவரை  முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில்தான் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இவர், கடந்த மாதம் 18ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று சந்தித்து பேசினார். அப்போது, ‘‘தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சட்ட மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக விரைவில் அனுப்பி வைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,BC ,Stalin , Tamil Nadu, NEET Election, Governor, MK Stalin, Meeting
× RELATED கோடைக் காலங்களில் ஏற்படும் உடல்...