அரசுக்கு ரூ.6.50 கோடி இழப்பு ஏற்படுத்திய வீட்டு வசதி கடன் சங்க செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை: திருச்சியில் பரபரப்பு

திருச்சி: திருச்சி தில்லைநகரில் திருச்சி மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் செயலாளராக இருப்பவர் கார்மேகம் (53). தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.குமார் இருந்தார். இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதில் மூத்த உறுப்பினர்களுக்கு அரசு நிர்ணயித்த விலையின் படி அரசு இடங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2016-17ல் தில்லைநகர், தென்னூரில் உள்ள அரசு இடத்தில் 25 ஆயிரம் சதுர அடியை 6 பேருக்கு செயலாளர் கார்மேகம் அனுமதியின்படி விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையில், அரசு நிர்ணயித்த விலையை விட சந்தை மதிப்பில் குறைவாக விற்பனை செய்ய அனுமதி வழங்கி, அரசுக்கு ரூ.6.50 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக செயலாளர் கார்மேகம் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கடந்த 2020ம் ஆண்டு புகார் சென்றது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்சி கருமண்டபத்தில் உள்ள செயலாளர் கார்மேகம் வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கார்மேகம், அனுமதியின்படி அரசு நிர்ணயித்த ஒரு சதுர அடி விலையான ரூ.3 ஆயிரத்தை மாற்றி ரூ.150க்கு நிலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.6.50 கோடி இழப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவான நிலையில் கார்மேகம் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 45 பவுன் நகைகள், ரூ.2.75 லட்சம் ரொக்கம் மற்றும் 150 பவுன்  நகைகள் அடகு வைத்திருப்பதற்கான நகை அடமான ரசீது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கார்மேகம் கைது செய்யப்படுவார் என்றனர்.

Related Stories:

More
>