வனத்துறையினர் கண்ணில் தென்பட்டும் ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல்: 19வது நாளாக தேடுதல் பணி நீடிப்பு

கூடலூர்: கூடலூர் வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி வனத்துறையினர் கண்ணில் தென்பட்டும் மயக்க ஊசி செலுத்த முடியாததால் அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடலூர் அடுத்த மசினகுடி வனப்பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற டி23 புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மதுரை ஊராட்சிக்குட்பட்ட கோழி கண்டி பகுதியில் சிசிடிவி கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து இரு மாநில வனத்துறையினர், 5 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர்  மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கிகள், மருந்துகள், வலைகளுடன் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், புலி தப்பிவிட்டது. 3 குழுவினர் 19வது நாளாக நேற்று ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட ஓடக் கொல்லி, மாங்களாஞ்சி பகுதிகள் வழியாக முதுமலை நம்பிகுன்னு செல்லும் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

டிரோன் கேமராவும் தேடுதல் பணிக்கு பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் புலி சிக்கவில்லை. இதுவரை பலமுறை வனத்துறைக்கு புலி தென்பட்டும் மயக்க ஊசி போட முடியாத சூழல் ஏற்பட்டு வருகிறது. புதர் பகுதிகளில் புலி பதுங்கி இருப்பதாலும், அதனை வெளியே விரட்டும்போது வேகமாக ஓடி விடுவதாலும் மயக்க ஊசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஒம்பட்டா பகுதியில் புலி தென்பட்டதை அடுத்து புலிதேவன் எஸ்டேட் பகுதிக்கு புலி சென்று விடலாம் என்பதால், அந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காவல்துறை சார்பில் மன்வயல், போஸ்பார, ஒடக்கொல்லி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories:

More
>