சட்டசபையில் ரகளை கேரள அமைச்சர் உள்பட 6 பேர் மனுக்கள் தள்ளுபடி: நவ.22ல் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2015ம் ஆண்டு உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அமைச்சரவையில் மறைந்த கே.எம். மாணி நிதியமைச்சராக இருந்தார். அப்போது அவர், மது பாருக்கு லைசென்ஸ் வழங்கியதில் பல கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமைச்சர் மாணி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அப்போதைய எதிர்கட்சியான இடதுசாரி கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த 2015 மார்ச் 13ம் தேதி கே.எம். மாணி பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபைக்கு வந்தார்.

அப்போது, பட்ஜெட்ட் தாக்கல் செய்ய எதிர்ப்பு  தெரிவித்து இடதுசாரி கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருப்பிடம், கம்ப்யூட்டர், நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக அப்போதைய எம்எல்ஏ.வும் தற்போதைய கல்வித்துறை அமைச்சருமான  சிவன்குட்டி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயராஜன், ஜலீல், முன்னாள் எம்எல்ஏக்கள் அஜித், குஞ்சு முகம்மது, சதாசிவன் ஆகிய 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ரூ.2.20 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது. இந்த வழக்கு திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பு நடந்து வந்தது.

தங்களை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கடந்த வருடம் சிவன்குட்டி உள்பட 6 பேரும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கேரள  உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த 6 பேரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், நேற்று 6 மனுக்களையும் மீண்டும் தள்ளுபடி செய்தது. ‘கல்வித்துறை அமைச்சர் உள்பட 6 பேரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். நவம்பர் 22ம் தேதி அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக  வேண்டும்,’ என்றும் உத்தரவிட்டது.

Related Stories:

More
>