×

ஏழுமலையான் கோயில் 7ம் நாள் பிரமோற்சவம் சந்திர பிரபை வாகனத்தில் அருள்பாலித்த மலையப்பர்: நாளை தீர்த்தவாரியுடன் நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார். நாளை தீர்த்தவாரியுடன் வருடாந்திர பிரமோற்சவம் நிறைவு பெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 நாள் வருடாந்திர பிரமோற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி நாள்தோறும் காலை, இரவு என பல்வேறு வாகனங்களின் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி, பிரமோற்சவத்தின் 7ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் திவ்ய பிரபந்தம் மற்றும் பாராயணம் பாடி சிறப்பு பூஜைகள் செய்தனர். நேற்றிரவு உற்சவத்தில் சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 8ம் நாளான இன்று காலை ரதம் எனப்படும் மரத்தேர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வீதியுலா நடக்க வேண்டிய நிலையில் கொரோனா காரணமாக 2வது ஆண்டாக இந்தாண்டும் ரதம் வீதியுலா ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். இரவு பாயும் குதிரை வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பிரமோற்சவத்தின் 9ம் நாளான நாளை காலை கொரோனா பரவல் காரணமாக கோயிலுக்குள் உள்ள அயன மண்டபத்தில் சிறிய தொட்டியில் சக்கரத்தாழ்வார்  தீர்த்தவாரி நடைபெறும். மாலை கொடியிறக்கத்துடன்  பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.

* அக்னி, சாந்த வடிவம்
குதிரையின் மீது சூரியனுக்கு ரத சாரதியாக சிவப்பு மாலை அணிந்து ஊர்வலம் வருவதால் சூரிய பகவானின் ரூபம் தானே என்னும் விதமாக  தங்க சூரியபிரபை வாகனம் மற்றும் வெள்ளை நிற ஆடை, மாலை அணிந்து சந்திரபிரபை வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன், சந்திரன் வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சியளித்தார்.

Tags : Ezhumalayan Temple ,Pramorsavam ,Malayappar ,Chandra ,Tirthavari , Ezhumalayan Temple 7th day celebration
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு